யாரேனும் தங்களை கடவுளின் படைப்பு என்று நினைத்தால், அவருடைய நோய்க்கு உதவி தேவை என பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பேசுபொருளாகியுள்ளது.
அவர் தனது பதிவில், “யாரேனும் தங்களை கடவுளின் சிறப்புப் படைப்பு என்று நினைத்தால், அவருடைய நோய்க்கு உதவி தேவை என்று அர்த்தம். மனிதாபிமானம் மட்டும் தான் சிறப்பானது. மற்றவை யாவும் முக்கியமானதோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ அல்ல. மேலும் நான் இங்கு ஒருவரைப் பற்றி பேசவில்லை. இது தங்களுடைய தொழில்களில் வெற்றிகரமான மக்கள் என்று அழைக்கப்படுபவர்களை தாக்கும் ஒரு நோயாகும். அவர்களைக் கவனித்து, முடிந்த உதவிகளை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்” என கூறியுள்ளார்.
பாடகர் ஸ்ரீனிவாஸின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் அவர் பிரதமர் மோடியை தான் விமர்சித்துள்ளார் என ஒரு தரப்பினரும், இளையராஜாவை விமர்சித்துள்ளார் என இன்னொரு பக்கமும் இணையவாசிகள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி சொன்னது என்ன?
நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சோர்வில்லாமல் உழைப்பதற்கான காரணம் என்பது பற்றி சில கருத்துகளை சொன்னார். அதாவது, “என்னுடைய தாயார் இறக்கும் வரை நான் உயிரியல் ரீதியாக பிறந்த சாதாரண மனிதன் என நினைத்தேன். ஆனால் அதன்பிறகு நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது நான் கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க அனுப்பி வைத்தவன் என்பது புரிந்தது. இந்த பதவி, புகழ் எல்லாம் அவர் கொடுத்தது தான். அதுவே நான் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற்றுள்ளேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார்” என கூறியிருந்தார். இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அதேசமயம் சமீபத்தில் இசைஞானி இளையராஜா - கவிஞர் வைரமுத்து இடையே “பாடலுக்கு முக்கியம் இசையா? வரியா? என்ற ரீதியில் கருத்து மோதல் வெடித்துள்ளது. ஆனால் பாடகர் ஸ்ரீனிவாஸ் பெயர் குறிப்பிடாமல் பதிவு வெளியிட்டுள்ளதால் யாரை சொல்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.