உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாகக் காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.


பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். நேரில் வர முடியாத  பிரபலங்கள் சமூக வலைதளத்திலும் வீடியோ மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று காலை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின், நடிகர் சங்கக் கட்டடத்திற்கு மறைந்த கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


அதேபோல் நேற்றைய தினம் ஜாக்குவார் தங்கம், ராம்கி, உள்ளிட்ட பிரபலங்கள் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது  கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர்.


இது தொடர்பாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், “விஜயகாந்தின் இழப்பால் திரையுலகமே வீழ்ந்துவிட்டது போல தோன்றுகிறது. ஏன் என்றால், எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் அதற்கு குரல் கொடுப்பார். அவரிடம் உதவி வேண்டும் என்று கேட்கக்கூட வேண்டாம், நம்மைப் பார்த்தாலே என்ன பிரச்சனை என்று அழைத்து பேசுவார்.


இன்று நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கேப்டன்தான். இதனால், நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டவுடன் கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்று நாசர், விஷால், கார்த்திக்கிடம் கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.