தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கிய விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு பாடகர்,எடிட்டர், நடிகர் என தனது அவதாரங்களை மாற்றிக்கொண்டே வந்தவர் , தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’ . இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த பாகத்தை எடுக்கவும் விஜய் ஆண்டனி திட்டமிட்டிருந்தார். இதற்காக பல இயக்குநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பிச்சைக்காரன் முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் சசியையும் அணுகியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதன் பிறகு ‘பாரம்’ என்ற விருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமியை கமிட் செய்து அதற்கான அறிவிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்டனர். அதன் பிறகு சில காரணங்களால் அவரை நீக்கிவிட்டு ஆனந்த கிருஷ்ணன் என்ற இயக்குநரை ஒப்பந்தம் செய்தனர்.
ஆனந்த கிருஷ்ணன் தான் இயக்க போகிறார் என காத்திருந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தானே படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். பிச்சைக்காரன் படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை விஜய் ஆண்டனியே எழுதியிருக்கும் நிலையில், அந்த படத்தின் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் கூறும்பொழுது “என்னிடம் மக்கள் பலமுறை கேட்டிருக்காங்க, நீங்க எப்போ இயக்குநராக மாற போறீங்கன்னு, ஆனால் நான் அவர்களிடன் “இல்லை” என்றேதான் பதிலளித்திருக்கிறேன். யாரோ சமைத்த உணவே சுவையாக இருக்கும்பொழுது, நான் ஏன் சமையல்காரனாக மாற வேண்டும். இந்த இயக்குநர் அவதாரம் இயற்கையானது, நான் திட்டமிடவில்லை” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சில படங்களில் தான் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருப்பதால் , தனக்கு பிச்சைக்காரன் 2 படத்தை சிறந்த படமாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கிறார். பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் , ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக உருவாக உள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. துபாய், சென்னை, ஜார்ஜியா, கல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .இந்த படத்தின் வேலைகளை விரைவில் முடித்துக்கொடுத்துவிட்டு முழு மூச்சில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளாராம் .விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் முதல் பாகம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.