உலகின் மிகவும் முக்கியமான அறிவியல் விஞ்ஞானியும், உலக பணக்காரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், ஜூபிடர் கிரகத்தின் நிலவிற்கு இவரது நிறுவனத்தின் ராக்கெட்டை அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. நிஜ உலகின் அயர்ன்மேன் என்று அழைக்கப்படும் எலான் மஸ்க் பெட்ரோல் மற்றும் டீசல்களில் இயங்கும் கார்களின் வேகத்திற்கு இணையாக மின்சார சக்தியிலே இயங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தையும் தயாரித்து வருகிறார். உலகளவில் இவரது டெஸ்லா கார் நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது.


இந்த நிலையில், யூ டியூப் தொலைக்காட்சி மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மதன் கௌரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலமாக எலான் மஸ்கிற்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், டியர் எலான் மஸ்க் டெஸ்லா காரை தயவுசெய்து இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.






அவரது டுவிட்டிற்கு பதிலளித்திருந்த எலான் மஸ்க், தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்களும் இந்தியாவில் இதை செய்ய விரும்புகிறோம். ஆனால், உலகளவில் மற்ற நாட்டைவிட இறக்குமதி வரிகள் அதிகமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் போலதான், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் கருதப்படுகிறது. இவை இந்தியாவில் உள்ள இலக்குகள் மற்றும் காலநிலைகளும் ஒத்துபோவதற்கு சிரமமாக உள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் ரூபாய் 94க்கு விற்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றுசக்தியை உருவாக்க வேண்டும் என்றும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.


இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை அதிகளவில் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில், எலான் மஸ்க் இவ்வாறு பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.