2023-ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு திரையுலகம் ஓஹோ என இருந்ததோ அதே அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியும் தவித்தது. என்டர்டெய்ன்ட்மென்ட் துறையில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு பளபளப்பாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு சர்ச்சையிலும் சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் எந்தெந்த பிரபலங்கள் என்னென்ன சர்ச்சையில் சிக்கி கொண்டு ஹெட்லைன்ஸ்களில் இடம்பிடித்தனர் என்பதை பார்க்கலாம்..


ராஷ்மிகா மந்தனா:


AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அறைகுறை ஆடையுடன் முகம்சுளிக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. மார்ஃபிங் செய்யப்பட்ட அந்த ஒரிஜினல் வீடியோவில் இருந்தது நடிகை ஷாரா படேல் என்பது கண்டறியப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன. 



தொழில்நுட்பத்தை தவறான முறையில் பயன்படுத்தி இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்மிகா தனது சோஷியல் மீடியா பக்கம் மூலம் கோரிக்கை வைத்தார். 


த்ரிஷா கிருஷ்ணன் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் மன்சூர் அலி கான் இணைந்து பணியாற்றியதை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா குறித்த சர்ச்சையான கருத்தை மன்சூர் அலிகான் தெரிவித்த விவகாரம் பெரும் கண்டங்களுக்கு உட்பட்டது. வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதை ஏற்றுக்கொண்ட த்ரிஷா பதிலுக்கு தனது எக்ஸ் தள பக்கம் மூலம் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பதிவு செய்ய அவர்களின் பிரச்சினைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


விசித்ரா :


பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை விசித்ரா டாஸ்க் ஒன்றில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், ஸ்டாண்ட் கலைஞர் ஒருவரின் தவறான அணுகுமுறை குறித்தும் பகிரங்கமாக பேசி இருந்தார். பொழுதுபோக்கு துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான சவால்களை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியது. 


 



சமந்தா :


சமந்தா நடிப்பில் வெளியான புராண காவியமான 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அது அவரை சற்று எமோஷனலாக பாதித்தது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளரான சிட்டி பாபு "நடிகை சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. அவருக்கு நோய் இருக்கிறது என சொன்னதெல்லாம் வெறும் நடிப்பு" என கடுமையான விமர்சனங்களை முன்வைக்க அதற்கு சமந்தா மறைமுகமாக அவரை கேலி செய்யும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்து சரியான பதிலடி கொடுத்து இருந்தார். திரைத்துறையில் இருப்பவர்கள் ஏராளமான சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 


ரன்பீர் கபூர் :


ரன்பீர் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அனிமல்'. இப்படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் "அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாலிவுட்டை தெலுங்கு மக்கள்தான் ஆளுவார்கள்" என தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பொதுமக்களிடையே பெரும் விமர்சனங்களை பெற்றது. 


சிவகார்த்திகேயன் :


இசையமைப்பாளர் இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறி பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தினார். மேலும் சில தனிப்பட்ட காரணங்களால் இனி அவருடன் கூட்டணி சேர இயலாது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தனிப்பட்ட பிரச்சனைகளால் திரைப்பட துறையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. 


ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி :


துணை நடிகையின் தற்கொலை வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் புஷ்பா பட துணை நடிகரான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. இதனால் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டூப் போட்டு எடுத்தால் மொத்த படத்தையும் அது கெடுத்து விடும் என்பதால் அவரை படத்தில் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்க வைப்பதற்காக 20 லட்சம் கொடுத்து ஜாமீனில் எடுத்தனர் படக்குழுவினர். இந்த விவகாரம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.