தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் கடந்த 2019 ம் ஆண்டு இயக்குனர் பா. ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை அதிகளவில் இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சியில் தான் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் இணையவாசிகள் வரை
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மாறுபட்ட விமர்சனங்களும் வரத்தொடங்கின.
தொடர்ந்து, இயக்குனர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலைய காவல் ஆய்வாளர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில், தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யகோரி, இயக்குனர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும், தனது கருத்து எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தாக இயக்குனர் பா. ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.