பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அந்தப் படத்திற்கு அடுத்தப்படியாக பிரபாஸ் சஹோ படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படங்கள் அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக பிரபாஸ் நடித்த ஒரு படம் கூட வெளியாக வில்லை. அதனால் அவரது ரசிகர்கள், பிரபாஸ் நடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ராதே ஷியாம் படத்திற்காக  காத்திருந்து வருகின்றனர். 


ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14 அன்று  வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்த பட்ட ஊரடங்கு காரணமாக ராதே ஷியாம் பட ரிலீஸ்  தள்ளி கொண்டே போனது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மிகவும் அப்செட்டில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து காதலர் தினத்தன்று படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.






 


இதனையடுத்து பிரபாஸ் பிறந்த நாளில்  ‘ராதே ஷியாம்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டது.இந்த டீசர் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது என்றே சொல்ல வேண்டும். 






 


ஆனால் அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான எந்த சுவாரஸ்யமான அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. ராதே ஷியாம் படத்தின் தயாரிப்பாளர்கள் எந்த அப்டேட்டும் கொடுக்காததால் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தனது இறப்புக்கு காரணம் ராதே ஷியாம் படக்குழுவினர் என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்கொலை செய்வதே தவறான முடிவு என கூறும் நிலையில் சினிமாவுக்காக தற்கொலை செய்துகொண்ட ரசிகரின் குடும்பத்துக்காக பலரும் ஆறுதலை தெரிவித்துள்ளனர். 


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050