'அவனுக்கு குறுக்க வந்துறாதீங்க சார்ர்ர்ர்ர்' என அனல் தெறி பில்டப்போடு யாஷின் KGF 2 ஒரு பக்கம் கச்சைகட்ட இன்னொரு பக்கம் 'எவன் வந்தாலும் அலறவிட்டு கெத்து காட்டணும்டா...ஜாலியோ ஜிம்கானா' என செம கூலாக பீஸ்ட் விஜய்யும்  மோதலுக்கு தயாராகி வருகின்றனர். ஒரே சமயத்தில் ரிலீஸாக இருக்கும் KGF 2 Vs Beast இதுதான் கோலிவுட்டின் இப்போதைய டாக் ஆஃப் தி டவுண்.


ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி மோதிக் கொள்வது 15-20 வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண விஷயமாகவே இருந்தது. கோலிவுட்டிலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி இரண்டாம்கட்ட நடிகர்களின் படங்கள் வரை ஒரே நாளில் ரிலீசாகியிருக்கின்றன. இப்படி ஒரே நாளில் ரிலீசான ஆறேழு படங்களுமே ஹிட் ஆன வரலாறெல்லாம் உண்டு. ஆனால், காலங்கள் செல்ல செல்ல சினிமாவின் வணிகப்போக்கு மாற மாற இப்படி ஒரே நாளில் பல பெரிய படங்கள் வெளியாகும் வழக்கம் குறைந்துக் கொண்டே வந்தது. இப்போதெல்லாம் இரண்டு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாவதே அரிதினும் அரிதான சம்பவமாக இருக்கிறது. அந்த அரிதான சம்பவத்தையே இப்போது KGF 2 ம் பீஸ்ட்டும் செய்ய இருக்கின்றன.


நடிகர் விஜய், தமிழ்சினிமாவில் இன்றைய தேதிக்கு நம்பர் 1 நடிகர். யாஷ், கன்னட தேசத்தின் மாஸ் நடிகர். KGF மூலம் எல்லைகள் கடந்து பல மொழிகளிலும் கால்பதித்தார். இந்த இரண்டு பேரின் படமும் ஒரே சமயத்தில் ஒரு நாள் இடைவெளியில் ரிலீஸாக இருப்பது நிச்சயமாக பரபரப்பான விஷயமே.


விஜய்யை பொறுத்தவரைக்கும் அவருடைய பல படங்கள் இதற்கு முன் மற்ற நடிகர்களின் பெரிய படங்களுடன் மோதியிருக்கிறது. மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியோடுதான் விஜய்யின் சச்சினும் இறங்கி ஹிட் அடித்தது. சமகால போட்டியாளரான அஜித்தின் ஆழ்வார் படத்துடன் விஜய்யின் போக்கிரி வெளியாகி பம்பர் ஹிட் அடித்திருந்தது. 2014 இல் விஜய்யின் ஜில்லாவும் அஜித்தின் வீரமும் பொங்கல் ரேஸில் முறுக்கிக் கொண்டு முன்னேற இரண்டுமே சுமாராக ஓடிய சம்பவங்களும் உண்டு. விஜய்யின் கத்தி, பிகில் போன்ற படங்கள் இரண்டாம் கட்ட நடிகர்களான விஷால், கார்த்தியின் பூஜை, கைதி போன்ற படங்களுடன் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது. விஜய்யின் படங்களுமே தன்னைவிட மேலே இருக்கும் சூப்பர் ஸ்டார் தொடங்கி அடுத்தக்கட்ட நடிகர்களின் படங்கள் வரை அத்தனையுடனும் மோதியிருக்கிறது.


ஆனாலும், இந்த KGF 2 Vs Beast என்பது கொஞ்சம் வித்தியாசமான மோதலாகவே பார்க்கப்படுகிறது. KGF 2 நேரடி தமிழ்ப்படம் இல்லை. டப்பிங் படமே. ஆனாலும், முதல் பாகத்திற்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு இந்த இரண்டாம் பாகத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. KGF 2 கன்னடம் மற்றும் தமிழில் மட்டுமில்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என Pan Indian படமாக வெளியாக இருக்கிறது. அத்தனை மொழிகளிலும் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய்யின் Beast அதுவும் தமிழ்ப்படம் மட்டுமில்லை. அதுவும் ஒரு Pan Indian படமாகவே வெளியாக இருக்கிறது. தொடர்ச்சியான ஹிட்களால் கோலிவுட்டின் உச்சபட்ச இடத்தில் இருக்கும் விஜய் தன்னுடைய மார்கெட்டை இந்தியா முழுவதும் விஸ்தரிக்கும் நவீன ட்ரெண்டிற்கு மாஸ்டரின் போதே வந்துவிட்டார். மாஸ்டர் படமே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியிருந்தது. மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் ஆங்கிலத்திலேயே 'பீஸ்ட்' என டைட்டில் வைக்கப்பட்ட போதே இந்த படமும் Pan Indian படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே அத்தனை மொழிகளிலும் பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியா முழுவதுமே KGF 2 Vs Beast தான்.


KGF 2 விற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சமீபத்தில் பெங்களூருவில் அனைத்து மொழி பத்திரிகையாளர்களையும் பிரபலங்களையும் கூட்டி பிரம்மாண்டமான KGF 2 ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஆனால், பீஸ்ட்டிற்கு பெரிய அளவிலான ப்ரமோஷன்கள் எதுவுமே இதுவரை செய்யப்படவில்லை. வழக்கமாக விஜய் படங்களுக்கு விஜய்யின் மேடைப்பேச்சுகள் பெரும் மைலேஜை கொடுக்கும். ஆனால், இந்த முறை என்ன காரணமோ அந்த மேடைப்பேச்சும் இல்லை. ஆடியோ வெளியீட்டு விழாவும் இல்லை. இரண்டு பாடல்கள் வெளியாகி வைரல் ஹிட் ஆகியிருக்கின்றன. அது மட்டுமே ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. சில ரசிகர்கள் எந்த ப்ரோமோஷனும் செய்யாமல் இருக்கும் சன்பிக்சர்ஸ் மீது தங்களின் கோபத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர்.


ஆனால், விஜய்யின் பேட்டி ஒன்று பீஸ்ட் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. அப்படி வெளியானால் அது படத்திற்கு பெரிய விளம்பரமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், விஜய் கடைசியாக 'தலைவா' படத்தின் போதுதான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு நேரடியாக பேட்டியளித்திருந்தார். அதுவும் சன் டிவிக்கே! ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளில் ரிலீஸான வேறெந்த படத்திற்காகவும் விஜய் எந்த தொலைக்காட்சி பேட்டியும் கொடுத்ததில்லை. பத்தாண்டுகளாக நிகழாத அந்த சம்பவம் பீஸ்ட்டுக்கு நிகழும்பட்சத்தில் அது படத்திற்கு மாபெரும் ப்ரோமோஷனாக இருக்கும். 


ப்ரோமோஷன் இருக்கிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் தமிழ் சூப்பர் ஸ்டார் ஒருவரின் படத்தை தாண்டி வேறொரு படம் பெரிய ஓப்பனிங் பெறுவதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. அதேநேரத்தில், தமிழ்நாட்டிற்கு வெளியே குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் யாஷின் மாஸ், பீஸ்ட்டிற்கு கடுமையான போட்டியளிக்கும் என்பதையும் மறுக்க முடியாது.


இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகும் இந்த நிகழ்வை ஒரு மோதலாக பாவிக்காமல் சினிமா ரசிகர்களுக்கான வெயிட்டான ட்ரீட்டாக பார்த்தால் இரண்டு படமுமே கல்லா கட்டும். அதைத்தான் 'இது Beast Vs KGF இல்லை. Beast and KGF' என யாஷும் கூறியிருந்தார். விஜய்யுமே இதே மாதிரியான இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸாவதை ஆரோக்கியமான போட்டியாகவே பார்த்திருக்கிறார். வீரமும் ஜில்லாவும் ரிலீஸான போது ஜில்லா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், வீரம் படத்திற்கும் வாழ்த்துக்கள். ரசிகர்கள் அந்த படத்தையும் பார்க்க வேண்டும் என விஜய் பேசியிருப்பார். அதேமாதிரி, நரேன் நடிக்க இரா.சரவணன் இயக்கிய கத்துக்குட்டி படம் விஜய்யின் புலி படத்துடன் வெளியாக இருந்தது. அந்த சமயத்தில் விஜய்யை எதேர்ச்சையாக சந்தித்த நரேன் எங்களின் சிறிய படம் ஒன்றும் உங்கள் படத்துடன் வெளியாகிறது என கூற, அதற்கு விஜய் 'சின்ன படம் பெரிய படமெல்லாம் கிடையாது. நல்ல படமாக இருந்தால் மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்' என கூறியதாக ஒரு செய்தி உண்டு. அதேதான்! நல்ல பொழுதுபோக்கு படங்களை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள். அவை தனியாக வந்தாலும் சரி கூட்டத்தோடு வந்தாலும் சரி. விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களே இதற்கான வெகுசமீபத்திய உதாரணங்கள். யாஷ் சொன்னதை போல இது Beast Vs KGF அல்ல, Beast and KGF தான். இரண்டு படங்களும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில்!!