தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விக்ரம் , பார்வதி திருவொத்து , பசுபதி , மாளவிகா மோகனன் , டேனியல் காலடாகிரோன் , முத்துக்குமார் ,ஹரி கிருஷ்ணன், வேட்டை முத்துக்குமார் , அர்ஜூன் , சம்பத் ராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. கிஷோர் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதும் ஆர் கே செல்வா படத்தொகுப்பை கையாண்டுள்ளார். எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் இருவரும் படத்தின் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்கள். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு  தங்கலான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது


விக்ரமின் 61-வது படமாக உருவாகி இருக்கும் தங்கலான் படம் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது தங்கலான்.


தங்கலான் டிரைலர் ஹைலைட்ஸ்




கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்கள் அந்த நிலத்தின் பழங்குடி இன மக்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த பழங்குடி இனத்தின் தலைவராக இருக்கிறார் விக்ரம். தங்கத்தை எடுக்கும்போது பல்வேறு விதமான தடைகள் எதிர்ப்படுகின்றன.  மாளவிகா மோகணன் ஆரத்தி என்கிற கிட்டத்தட்ட கற்பனை என்று நம்பப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


எப்படியாவது இந்த தங்கத்தை வெள்ளைக்காரர்களுக்கு எடுக்க உதவ வேண்டும் என்று நினைக்கும் விக்ரமுக்கும் இந்த ஆரத்திக்கு என்ன தொடர்பு என்பது கதையின் முக்கிய அங்கமாக இருக்கும். முதலில் ஆங்கிலேயர்களுக்கு உதவ வந்த பழங்குடி இன மக்கள் தங்கள் நிலத்திற்காகவும் தெய்வத்திற்காகவும் அதே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவதே படத்தின் மையக் கதையாக இருக்கும் என்று இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது. 




பழங்குடி மக்களுக்கும் அவர்களின் கடவுள்களுக்குமான நேரடித் தொடர்பு, விக்ரமின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் உருவங்கள் படத்திற்கு ஒரு அமானுஷ்யமான தன்மையையும் சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.


மொழி, உடை , தோற்றம் என ஒவ்வொரு அம்சமும் இப்படத்தில் தனித்துவமாக இருக்கும் என்று சொல்லலாம். முக்கியமாக ஒளிப்பதிவு  குவிண்டன் டாரண்டினோவின் Django Unchained படத்தின் சாயலில் இருப்பதை கவனிக்கலாம்.


ஜி.வி பிரகாஷின் இசை மேற்கத்திய கெளவ் பாய் இசை மற்றும் மெல்லிசை கலந்த ஒரு பின்னணி இசை டிரைலரின் ஹைலைட்ஸ்களில் ஒன்று.  ஸ்பெஷல் எஃபக்ஸ் காட்சிகளின் தரம் கதை நடக்கும் உலகத்திற்குள் செல்ல முக்கிய பங்கு வகிக்கும். 


ரஞ்சித்தின் முந்தைய படங்களைப் போல் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்னொருவருக்கு அடிமையாக இருப்பதும். பின் தங்கள் உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு அதற்காக போராடும் மக்களின் கதைதான் தங்கலான். ஆனால் இந்த கதையின் பிரம்மாண்டமும் அதில் ரஞ்சித் நமக்கு காட்ட இருக்கும் உணர்வுகளும் நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் என எதிர்பார்க்கலாம்