குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125இன் கீழ் விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.


விவாகரத்து பெற்ற தன்னுடைய மனைவிக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என முகமது அப்துல் சமத் என்பவருக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் மனு தாக்கல் செய்தார்.


"இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்" குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ஜீவனாம்ச தொகையை 10,000 ரூபாயாக குறைத்தது. இதை எதிர்த்து முகமது அப்துல் சமத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. இருவரும் தனித்தனியாக தீர்ப்புகளை எழுதியபோதிலும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.


நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பில், "இந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்கிறோம். திருமணமான பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பெண்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 பொருந்தும்.


உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? திருமணமான அனைத்து பெண்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் கோருவதற்கான சட்டம் பொருந்தும். ஜீவனாம்சம் என்பது உதவி அல்ல. ஆனால், திருமணமான பெண்களின் அடிப்படை உரிமை.


இந்த உரிமையானது மத எல்லைகளைத் தாண்டி, திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு என்ற கொள்கையை வலுப்படுத்துகிறது. இல்லத்தரசியான மனைவி, உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் இன்றி வேறு வழிகளிலும் தங்களைச் சார்ந்திருப்பதை சில கணவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.


குடும்பத்திற்காக இல்லத்தரசிகள் ஆற்றிய இன்றியமையாத பங்கு மற்றும் தியாகங்களை இந்தியாவில் இருக்கும் ஆண்கள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.


குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 இன் கீழ், வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், ​​சம்பந்தப்பட்ட முஸ்லீம் பெண் விவாகரத்து பெறும் பட்சத்தில், முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019,ஐ நாடலாம்.


குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125ஐ தவிர்த்து, முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019, இம்மாதிரியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியிருந்தது. 


குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 என்பது மதச்சார்பற்ற சட்டம் என்றும் இஸ்லாமிய பெண்களுக்கும் இது பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.