நடிகர் விக்ரம் காயம் அடைந்ததால்  நிறுத்தப்பட்ட தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


'சீயான்’ விக்ரமின் தங்கலான்


வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆம் பாகம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கேரக்டரை ஏற்று நடித்து, அதற்கு தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இதனையடுத்து விக்ரமின் அடுத்தப்படமாக “தங்கலான்” உருவாகி வருகிறது. 


பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தங்கலான் படத்துக்காக விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். 


படப்பிடிப்பில் காயம்


தங்கலான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியிலும், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விக்ரம் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வெளியானது.  இதில் விக்ரம் காட்சிக்கு தயாராவது,செட் போடும் பணிகள், பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது உள்ளிட்ட ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 


இந்நிலையில் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயமடைந்தார். கடந்த மே 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. விக்ரமுக்கு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டது.  


விக்ரம் காயமடைந்ததால் தங்கலான் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் காயத்தில் இருந்து விக்ரம் குணமடைந்ததால் படப்பிடிப்பு இந்த வாரத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் இந்தாண்டு இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க: Kollywood Movies: தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் அறிமுக இயக்குநர்கள் - 2023ஆம் ஆண்டு இவர்கள் கையில் தானா?