2023 ஆம் ஆண்டின் முதல் பாதி கிட்டதட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவும் பெரிய வெற்றியும் இல்லாமல், பெரிய தோல்வியும் இல்லாமல் ஓரளவு நல்ல நிலைமையிலேயே சென்று கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முதல் பாதியில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு, பல கோலிவுட் பிரபலங்கள் நடித்த பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் தவிர பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் ரஜினி, விஜய், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.


இந்நிலையில் நாம் ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவை கவனித்தால் புதிய இயக்குநர்களின் ஆதிக்கம் பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் புதிய இயக்குநர்களின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் பூர்த்தி செய்துவிட்டது என்றே சொல்லலாம். இது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. 


நடப்பாண்டில் கவனம் பெற்ற அறிமுக இயக்குநர்களின் படங்கள்


டாடா


கணேஷ் கே.பாபு அறிமுக இயக்குநராக இயக்கிய டாடா படம் கடந்த பிப்ரவரி மாதம்  தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்த டாடா படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ஜென் மார்டின் இசையமைத்த நிலையில்  யதார்த்த வாழ்க்கையில் காதல் திருமணம் செய்தவர்களிடையே நிகழும் சமூக - பொருளாதார சிக்கல்கள் குறித்து இப்படம் பேசியிருந்தது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.20 கோடி வசூலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. தந்தை பாசமும் ரசிகர்களை கவர்ந்தது. 


அயோத்தி


மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி நடித்த படம் ‘அயோத்தி’. இந்த படம் மார்ச் மாதம் தியேட்டரில் வெளியானது. ஆனால் தியேட்டரில் பெரிய வரவேற்பை பெறாத இப்படம் ஓடிடியில் ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ செய்தது மதம் கடந்த மனித நேயத்தின் அவசியம், மனித உணர்வுகளின் புரிதல் ஆகியவற்றை படம் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்தது. வெற்றிக்காக போராடிய சசிகுமாருக்கு முக்கியமான படமாக இது அமைந்தது. 


யாத்திசை


ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘யாத்திசை’. வரலாற்று படம் என்றாலே பிரமாண்டம் என்ற விதியை உடைத்து குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். அதிகாரத்தை அடைவதற்காக பேரரசை எதிர்க்கும் சிறு குடியின் தகிக்கும் போராட்டம் தான் இப்படத்தின் கதையாகும். 


பிச்சைக்காரன் 2


இந்த படத்தின் இயக்குநர் ஏற்கனவே இசையமைப்பாளராக, நடிகராக மக்களிடையே வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி தான் என்றாலும் இயக்குநராக பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் முதல் படத்தின் மூலம் மக்களை கவர்ந்தார் விஜய் ஆண்டனி. மே மாதம் வெளியான இந்த படம் ரூ.15 கோடியில் எடுக்கப்பட்டு ரூ.36 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. 


குட் நைட்


விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில்  மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘குட்நைட்’ படம் சூப்பர் ஹிட்டானது. குறட்டையை மையமாக வைத்து ஃபீல்குட் படமாக இது அமைந்தது. ரசிக்கும்படியான திரைக்கதை, காதல், காமெடி என அனைத்து ஏரியாவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 


போர் தொழில் 


விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில். இந்த படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. க்ரைம் த்ரில்லர் கதையை ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.