விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக தங்கலான் படக்குழு பகிர்ந்துள்ள அப்டேட் விக்ரம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கலான் படக்குழு
பா.ரஞ்சித் உடன் முதன்முறையாக விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
மீண்டும் கேஜிஎஃப் கதைக்களம்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படம் மூலம் ஏற்கெனவே இந்தக் கதைக்களம் கவனம் ஈர்த்த நிலையில், இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது தங்கலான் படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரமின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தங்கலான் படக்குழுவினர் சூப்பரான அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளனர்.
தங்கலானின் உலகம்
நடிகர் விக்ரம் தன் பிறந்தநாளை வரும் ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அன்று தங்கலானின் உலகம் பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள்” எனக்கூறி இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தங்கலான் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் 25 நாள்கள் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விக்ரம் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் நடிகர் விக்ரமின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தடுத்து மாஸ் காண்பிக்கும் விக்ரம்
சென்ற ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து விக்ரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்த நிலையில், தற்போது அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இந்த மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தையும் விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மறுபுறம் தங்கலான் படக்குழுவினரும் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது அப்டேட் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.