தங்கலான் ரிலீஸ் தேதி


நடிகர் விக்ரம் - இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


வரவேற்பு பெற்ற டீசர்


தமிழ் பழங்குடியினர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 2 மாதங்களுக்கு முன் வெளியாகி விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து படத்தை ஆஸ்கர் வரை கொண்டு படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக படத்தினை மேலும் செழுமைப்படுத்தி வருவதாகவும், இதனால் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகும் எனவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய இயக்குநர் பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் முன்னதாக படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது.


விக்ரம் ரசிகர்கள் கவலை


இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்து தங்கலான் படக்குழ் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளதாக இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத நிலையில், தங்கலான் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான்?


ஏற்கெனவே விக்ரம் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த நவ.24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் கௌதம் மேனனின் நிதி சிக்கல் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது. 


இந்நிலையில் துருவ நட்சத்திரம் விரைவில் வெளிச்சத்தைக் காணும் என்றும், தாங்கள் படத்தைக் கைவிடவில்லை என கௌதம் மேனன் முன்னதாக நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.


இச்சூழலில் ஏற்கெனவே தொடர்ந்து தள்ளிப்போய் வரும் துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்து விக்ரம் ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் தற்போது தங்கலான் திரைப்படமும் இணைந்துள்ளது. எனினும் துருவ நட்சத்திரம் படம்போல் பிரச்னைகளில் தங்கலான் சிக்காததால் இப்படம் இன்னும் மெருகேறி வெயிட்டாக வெளிவரும் என்றும் விக்ரம் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!