Captain Miller Review: நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். 


கேப்டன் மில்லர் படத்தின் கதை:


வெள்ளைக்காரனிடமிருந்து நாட்டை காத்து கொள்ளைக்காரன் கையில் கொடுத்த கதை ஆக இருக்கிறது என்ற ஒரு சொலவடை அரசியல் வட்டாரத்தில் உண்டு. அதை சற்றே கேப்டன் மில்லருக்கு பொருத்தி பார்க்கலாம். 


தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில்  மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர். அதனை பொறுக்க முடியாமல் பட்டாளத்தில் ஆங்கிலேய படையில்  சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கோ ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்துகிறார்கள்.


இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கை வாழும் அவரை புரட்சி கூட்டம் அரவணைக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனை பொறுக்காத  மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருட செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கும் நிலையில் ஆங்கிலேயர் - மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். யாரால் வெறுத்து துரத்த பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக  தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.


நடிப்பு எப்படி?


சுதந்திரத்துக்கு முன்னால் நடக்கும் கதையாக, 5 அத்தியாயங்களை கொண்ட பகுதியாக, கேப்டன் மில்லர் படமாக்கப்பட்டுள்ளது. ஈசனாக இருக்கும் தனுஷ் கேப்டன் மில்லராக மாறி அதகளம் பண்ணியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடல் மொழி , உணர்வுகள் என மனிதர் அனைத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.  3 பாகங்களை கொண்ட படம் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்தப் முழுக்க தனுஷ் தான் நிரம்பியிருக்கிறார். மேலும் செங்கோலனாக வரும் சிவராஜ் குமார், வேல் மதியாக வரும் பிரியங்கா மோகன், தேன் ஆக வரும் நிவேதிதா தொடங்கி சந்தீப் கிஷன், வினோத் கிஷன் என அனைவரும் தங்கள் கேரக்டருக்காக இந்த பாகத்தில் முழு பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். 


படம் எப்படி?


இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய  ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல்,  சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். மொத்த படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு கதைக்கு எத்தகைய உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது. படத்தின் பெரும்பலம் என்று பார்த்தால்  சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தான். குறிப்பாக இடைவேளை காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.


மேலும் சமூகத்தில் காணப்படும் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சுயநலத்துக்காக பயன்படுத்தப்படும் மக்கள், சமூக நீதிக்காக போராட செல்பவர்களால் அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என படத்தில் ஆங்காங்கே சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல்,  "நம்பிக்கை தவறில்லை அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்".. "மேல்- கீழ் ஜாதி, பணக்காரன் ஏழை எந்த நிலையாக இருந்தாலும் பெண் அடிமையாக தான் இருக்க வேண்டும்" , "பெண் பேச்சை கேட்க வேண்டுமென்றால் அவள் அதிகாரத்தில் இருக்க வேண்டும்", “நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்”, “சிங்கம் - ஓநாய் கதை”  போன்ற வசனங்களும் கேப்டன் மில்லரை பளிச்சிட செய்கின்றன. 


வஞ்சத்துக்கும் சுயநலத்துக்கும் மத்தியில் நடக்கின்ற கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் தான் சிதறுகின்றன. இதனை சற்று எடிட்டிங்கில் குறைத்திருக்கலாம்.  ஆக மொத்தத்தில் கேப்டன் மில்லர் ஒரு தரமான ஆக்ஷன் படைப்பு..!


ALSO READ | Merry Christmas Review: "தூக்கம் தொலைத்த ஓர் இரவின் கதை ” - விஜய் சேதுபதியின் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!