விக்ரம்


நடிகர் விக்ரமின் தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. பா.ரஞ்சித் இயக்கத்தில் வரலாற்றுத் திரைப்படமாக உருவான தங்கலான் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றுள்ளது. தமிழைத் தொடர்ந்து இப்படம் தற்போது இந்தியிலும் வெளியாகியது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் நடிகர் விக்ரமின் நடிப்பு அனைத்து தரப்பாலும் பாராட்டுக்களைப் பெற்றது. விக்ரமின்  நடிப்பாற்றலை நிரூபிக்கும் படமாக தங்கலான் படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 


தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் சினிமாவில் தான் எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். விபத்தில் தனது காலை கிட்டதட்ட இழந்துவிடும் சூழல் ஏற்பட்டதாகவும் அதை எல்லாம் மீறி போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது தனது மனைவி ஷைலஜாவுடனான உறவைப் பற்றி நடிகர் விக்ரம் வெளிப்படையாக பேசியுள்ளார்


என் மனைவிக்கு நான் சினிமாவில் இருப்பது பிடிக்காது


பிரபல யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், "நான் பாதி இந்து, பாதி கிறித்துவ வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி ஷைலஜா ஒரு மலையாளி. இதனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இன்றைய சூழலில் லிவ் இன் என்று சேர்ந்து இருக்கலாம் ஆனால் அன்றைய சூழலில் அப்படி இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு நடந்த எல்லா நல்லதுக்கும் என் அம்மாதான் காரணம். என் திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையில் என் மனைவி எனக்கு பெரும் ஆதரவாக இருந்திருக்கிறார். அவர் ஒரு மனநல ஆலோசனை மருத்துவம்.  நிறைய பேருக்கு உதவி செய்யும் ஒரு தேவதை மாதிரி அவர். அவரை நான் முதல்முறையாக பார்த்த போது எனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. பின்னாட்களில் அவருக்கு என்னைப் பார்த்தபோது உள்ளுக்குள் மணி அடித்ததாக என்னிடம் தெரிவித்தார்” என்று விக்ரம் தெரிவித்துள்ளார் .


தொடர்ந்து பேசிய அவர் “நானும் என் மனைவியும் முற்றியலும் நேரெதிரானவர்கள். எனக்கு ஏசி வேண்டும் என்றால், அவர் எனக்கு காற்றாடிக்கூட வேண்டாம் என்பார். நான் ஃபேஷனாக ஆடைகள் அணிய விருப்பப்படுவேன். ஆனால் அவருக்கு அது பிடிக்காது. ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. எங்களுக்கு திருமணம் ஆன புதிதில் அவர் என்னை நிறைய மாற்ற நினைத்தார். ஆனால் சினிமா தான் எனக்கு முதல் காதல் அடுத்து தான் நீ என்று நான் அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். இதில் சம்மதம் இல்லையென்றால் இந்த திருமண உறவு நீடிக்காது என நான் அவரிடம் சொல்லிவிட்டேன். சில நேரங்கள் நான் நடிக்கும் படங்கள் ஓடக்கூடாது என்று கூட அவர் நினைப்பார். ஆனால் இப்போது நான் நடிக்கும் படங்கள் மேல் அவர் நிறைய ஆர்வம் காட்டுகிறார். நாங்கள் இருவரும் நிறைய தவறுகள் செய்திருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டோம். ஆனால் வித்தியாசங்கள் இருந்தாலும்  திருமணம் என்பது ஒருவரின் இருப்பை இன்னொருவர் சகித்துக் கொள்வது தான் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்” என்று தெரிவித்தார்