நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளர்.   பீஸ்டின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி  பட்டையைக் கிளப்பியது. தளபதி 65 படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் . மேலும் இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் , மேலும் இந்த அழகான நடிகை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.


விரைவில் படப்பிடிப்பு  முடிந்து அடுத்தக்கட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த முறை விஜயை இயக்கப்போவது தெலுங்கு இயக்குநர் எனக் கூறப்படுகிறது. தெலங்கு இயக்குநர் வம்சி தான் தளபதி 66ன் இயக்குநர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 




விஜயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்துக்கு விஜய் தலையசைத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தகவலாக இப்படத்தில் விஜய் நடிக்க தென்னிந்திய நடிகர்களில் யாரும் வாங்காத ஒரு அதிகபட்ச சம்பளத்தை விஜய் பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் விரைவில் தளபதி 66 படம் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. முதன் முறையாக தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தளபதி 66 தொடர்பான தகவலை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


முன்னதாக ஏற்கெனவே தளபதி 66 படம் தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது. கடந்த ஜூலை மாதல், இயக்குநர் வம்சியின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். வம்சியின் நண்பரான க்ரிஷும், புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இயக்குநரும், நல்ல மனிதருமான இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வருடம் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள். நடிகர் விஜய் உடனான படத்திற்கு வாழ்த்துகள். காத்திருக்கிறோம் என பதிவிட்டார். இந்த ட்வீட்டை போட்டதுமே வைரலானது. தளபதி 66 அப்டேட்  என விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.




ஆனால் ட்வீட் பதிவிட்ட உடனேயே அந்த பதிவை டெலிட் செய்தார் க்ரிஷ். ஆனாலும் அவர் பதிவிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில்  வைரலானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் தளபதி 66 படத்தை இயக்கப்போவது வம்சி தான் என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.