தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது அம்மா ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தளபதி விஜய்
தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியான நடிகர் விஜய், கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் “லியோ” படத்தில் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் - ஷோபா
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், அம்மா ஷோபா மீது மிகப்பெரிய அளவில் அன்பு வைத்துள்ளார். தான் இன்று இவ்வளவு பெரிய நடிகராக காரணம் அவரது அம்மா தான் என பல நேர்காணல்களில் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகன், விஷ்ணு, ஒன்ஸ்மோர், சிவகாசி உள்ளிட்ட படங்களில் பாடல்களை ஷோபா பாடியுள்ளார். இருவரும் இணைந்து ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் ஒன்றிலும் இணைந்து நடித்துள்ளனர்.
இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய், தனது பெற்றோரை கண்டுகொள்ளவில்லை என கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால் இதனை ஷோபா மறுத்தார். ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட விழாவில் விஜய் எங்களை கண்டுக்கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்ப்பார்கவில்லை எனவும் ஷோபா பதிலளித்தார். மேலும் கடந்தாண்டு நடைபெற்ற எஸ்.ஏ.சந்திரசேகரின் சதாபிஷேக விழாவில் கூட விஜய் பங்கேற்காதது ரசிகர்களிடையே பேசுபொருளானது.
ரசிகர்களுக்கு திரையில் அட்வைஸ் கொடுப்பவர் முதலில் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என சரமாரியாக அறிவுரைகள் பறந்தன. இப்படியான நிலையில் விஜய் தன் அம்மா ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் இன்று இணையத்தில் வைரால்கியுள்ளது. இதில் லியோ பட கெட்டப்பில் விஜய் கீழே அமர்ந்திருக்க, சோபாவில் ஷோபா அமர்ந்திருக்கிறார். இது தனது பெற்றோரின் 50வது திருமண நாளையொட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சர்ச்சைகளுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என கூறப்படுகிறது.