நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் கன்னட நடிகர் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். கேப்டன் மில்லர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு அருகே நடந்து வருகிறது. இது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இடைப்பட்ட பகுதியாகும். இங்கு உயர் பீம் லைட்டுகள், தீப்பற்றுவது, குண்டு வெடிப்பது தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இதனிடையே படக்குழுவினரின் இந்த சம்பவத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மத்தளம்பாறையில் நடக்கும் கேப்டன் மில்லரின் படப்பிடிப்பை நடந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் எந்த துறையிலும் படக்குழு அனுமதி பெறவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கேப்டன் மில்லர் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராம.உதயசூரியன் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினரிம் கடந்த மாதம் மனு ஒன்றை அளித்தார். அதில், படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் உள்ள தாங்கலில் மிகப்பெரிய செட் அமைத்தும், செங்குளம் கால்வாயின் குறுக்கே அனுமதியின்றி மரப்பாலம் கட்டப்பட்டும் உள்ளது. இது கால்வாய் கரையில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு நிலங்களுக்குள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் செங்குளம் கால்வாயின் கரையை சேதப்படுத்தி அந்த பகுதியை மண்ணால் நிரப்பியது தெரிய வந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.