நடிகர் விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்திய “திருமலை” படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


ரொமான்டிக் டூ ஆக்‌ஷன் ஹீரோ 


நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் “தளபதி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய். தொடர்ந்து காதல் கதைகளில் அதிகம் நடித்து இளம் ரசிகர்களையும், பேமிலி ஆடியன்ஸ்களையும் அதிகம் பெற்று முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இப்படியான நேரத்தில் தான் தன்னுடைய பாதையை ஆக்‌ஷன் பக்கம் திருப்பினார் விஜய். அதற்கு அடித்தளமாக அமைந்தது தான் “திருமலை” படம். 


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ரமணாவின் இயக்கத்தில் உருவான திருமலை படத்தில் ஜோதிகா, மனோஜ் கே.ஜெயன், விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்தார். 


படத்தின் கதை 


பைக் மெக்கானிக்காக இருக்கும் திருமலை (விஜய்), புத்தாண்டு தினத்தில் ஸ்வேதாவை (ஜோதிகா) கண்டதும் காதலில் விழுகிறார். முதலில் திருமலை ஸ்வேதாவால் அவமானப்படுத்தப்பட்டாலும், பின் இருவரும் காதலிக்கின்றனர். இந்த விவகாரம் ஸ்வேதாவின் அப்பாவான அசோக்கிற்கு (அவினாஷ்) தெரிய வருகிறது. அந்தஸ்து பிரச்சினையால் அவர் தாதா அரசுவிடம் (மனோஜ் கே ஜெயன்) சொல்லி திருமலையை கொலை செய்ய சொல்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து திருமலை எப்படி தப்பித்தார் என்பதை விறுவிறு ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்லியிருந்தார் இயக்குநர் ரமணா. 


தோற்றத்தை மாற்றிய விஜய் 


உண்மையில் தமிழ் சினிமாவில் விஜய்யின் டிரான்ஸ்பர்மேஷனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதற்கு காரணம் மீசை மட்டுமே வைத்துக் கொண்டு தாடி எந்த வித எக்ஸ்ரா புது கெட்டப்பும் விஜய் முயற்சித்ததே இல்லை. இதனை அவரின் படங்களை பார்த்தாலே தெரியும். ஆனால் இந்த படத்தில் மீசையை கத்தரித்து, தாடி வளர்த்து புதிய விஜய்யாக  அறிமுகமாக ரசிகர்களும் அது புதிதாகவே இருந்தது, பிடித்தும் இருந்தது. 


புதிய தோற்றத்தை விஜய்க்கு இயக்குநர் ரமணா தான் பரிந்துரைத்தார். மேலும் முதலில் கதாநாயகியாக நம்ரதா ஷிரோத்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜோதிகா நடித்தார். குஷி படத்துக்கு பின் இருவரும் ஜோடி சேர்ந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நடிகை கிரணும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 


வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தாம்தக்கா தீம்தக்க பாடலில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து அட்டகாசமாக நடனமாடி அசத்தியிருப்பார். இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை கொண்ட திருமலை படம் 2003 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. 




மேலும் படிக்க: Bigg Boss Seanson 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய புலி நகம்.. முக்கிய பிரபலத்தை கைது செய்த வனத்துறை..!