கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வர்தூர் சந்தோஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களுக்கு நிகராக வயது வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ரியாலிட்டி ஷோக்கள் ஈர்த்து வருகின்றன. தினந்தோறுமோ அல்லது வாரம் ஒருமுறையோ அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானால் தவறாமல் நம்மில் பலரும் டிவி முன்னால் ஆஜராகி விடுவோம். அப்படியே நிகழ்ச்சியை தவற விட்டு விட்டால் தற்போது ஓடிடி தளங்களில் எப்போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியை தமிழில் 7வது சீசனாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இந்தி. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் கிச்சா சுதீப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்யஸ்ரீ, எஷானி, கார்த்திக், மைக்கேல், நம்ரதா, நீது, பிரதாப், ரக்ஷக், சங்கீதா, சந்தோஷ் குமார், வர்தூர் சந்தோஷ், சரி, சினேஹித், தனிஷா,வினய், கௌரிஷ், ஷ்யாம், சித்ரால், அவினாஷ் ஆகிய 19 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான வர்தூர் சந்தோஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புலி நகம் கொண்ட செயின் ஒன்றை அணிந்திருந்தார். இது நிகழ்ச்சி வழியாக வெளியுலகுக்கு தெரிய வந்தது.
வனத்துறை சட்டப்படி புலி நகங்களை வைத்திருப்பது குற்றமாகும். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் நேற்று மாலை பிக்பாஸ் செட் போடப்பட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு வர்தூர் சந்தோஷின் செயினில் இருந்த நகங்கள் சோதனை செய்யப்பட்டது. அது ஒரிஜினல் தான் என தெரிய வந்ததை தொடர்ந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வர்தூர் சந்தோஷ், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனத்துறை துணைப் பாதுகாவலர் ரவீந்திர குமார், "அவர் புலி நகங்கள் அணிந்திருப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்வந்தது. இதன் பிறகு, நாங்கள் கோமகட்டா அருகே உள்ள பிக் பாஸ் ஸ்டுடியோவுக்குச் சென்று ஆய்வு செய்தோம். பின்னர் வர்தூர் சந்தோஷிடம் விசாரணை நடத்தினோம். அழிந்து வரும் உயிரினம் பட்டியலில் புலிகள் இருக்கும் நிலையில் இதற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அதிகப்பட்ச தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட வர்தூர் சந்தோஷ் கக்கலிப்புரா வனச்சரக அலுவலகத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.