நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


லியோ படம் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தை இளம் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.  அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ வெளியாகியுள்ளது. 


திரையிட்ட இடமெல்லாம் திருவிழா


லியோ படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான நிலையில் அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை கிட்டதட்ட ஒரு வார காலத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. பல இடங்களிலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், லியோ படத்தின் கலெக்‌ஷன் எகிறியுள்ளது. இப்படத்துக்கு நாள்தோறும் ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் 5 காட்சிகள் ஒரு ஸ்க்ரீனில் திரையிடப்படுகிறது. 


இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆனால் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் அனைவரும் விடுமுறை தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 


முதல் நாள் வசூல் நிலவரம் 


இதனிடையே லியோ படம் முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலை பெற்றதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நடப்பாண்டில் வெளியான படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும். மேலும் மீண்டும் விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் லியோ படம் கண்டிப்பாக வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என சினிமாத்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 




இரண்டாம் நாள் வசூல் நிலவரம் 


இந்நிலையில் லியோ படத்தின் 2ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. sacnilk தளம் வெளியிட்ட தகவலின்படி, “2 ஆம் நாளில் தமிழ்நாட்டில் ரூ.24 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடி, கர்நாடகாவில் ரூ.4.50 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.6 கோடி, இந்தியில் ரூ. 2 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.42 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலை லியோ படம் எட்டியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.