நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


சாதனை மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ: 


இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது. இந்தியாவின் 40 ஆண்டுகால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. 


அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் செல்லும் இந்தியன் நிலவில் தரையிறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ரேபிட் ரயிலை உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்து பேசிய மோடி, "விண்வெளித் துறைக்கு 2040 வரை வலுவான செயல் திட்டத்தை தயார்படுத்தியுள்ளோம்.


"முன்னேற்றத்தின் புதிய அத்தியாயங்களை இந்தியா எழுதிக் கொண்டிருக்கிறது"


நமது சொந்த விண்கலத்தில் சந்திரனில் இந்தியரை இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் ககன்யான் திட்டம் விரைவில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும். மேலும், சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் சந்திரயான்-3 சமீபத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தியது.


21 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயங்களை இந்தியா எழுதிக் கொண்டிருக்கிறது. சந்திரயான் நிலவில் தரையிறங்கியது உலகை வியப்பில் ஆழ்த்தியது. G20 உச்சிமாநாட்டை எந்த வித குறையும் இன்றி நடத்தியதன் மூலம், இன்றைய இந்தியா உலகை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளது. இன்றைய இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது.


இன்றைய இந்தியா அதன் பலத்தில் 5ஜியை அறிமுகப்படுத்தி நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு செல்கிறது. இன்றைய இந்தியா உலகிலேயே அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்கிறது. இன்று தொடங்கிவைக்கப்பட்ட நமோ பாரத் ரயில்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை" என்றார்.