லியோ படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டதாகவும் படம் சூப்பராக வந்திருப்பதாகவும் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி  படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படம் குறித்தான அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


லியோ இதுவரை...


லியோ படத்தின் முதல் அப்டேட் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி தான்’ பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இந்த நாளில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகர் அர்ஜூன் பிறந்தநாளன்று அந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


சர்ச்சையில் சிக்கிய நான் ரெடி பாடல்


முன்னதாக யூடியூபில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது இப்படத்தின் நா ரெடி பாடல். விஜய்யே இப்பாடலை பாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நா ரெடி பாடல் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதனைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் பாடலில் இருந்து பல்வேறு வரிகளை நீக்க உத்தரவிட்டுள்ளனர்.


நீக்கப்படும் வரிகள்


தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலில் இருந்து “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்ட சியர்ஸ் அடிக்க”, “பத்தவச்சு பொகைய விட்டா பவரு கிக்கு, புகையல புகையல பவரு கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவாண்டா” போன்ற வரிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளையும் பாடலில் இருந்து நீக்க தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


லியோ படம் எப்படி?


இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.


நான் ரெடி பாடல் குறித்து பேச மறுத்துவிட்ட அவர், அடுத்த வாரத்தில் இருந்து லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்தார். லியோ படத்தின் இசைவெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். லியோ படம் எப்படி வந்திருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும், படம் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் கூறினார். நடிகர் விஜய் இன்னும் படம் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார் லலித் குமார்.