’தளபதி’ விஜய் என்ற பெயரை உச்சரித்தால் காது கிழியும் அளவுக்கு கத்தும் ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் விஜய். தென்னிந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர், கடந்த 1984ம் ஆண்டு தனது 10 வயதில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் கிட்டத்தட்ட 7 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 


விஜய்யின் வளர்ச்சி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றார். தொடர்ந்து தனது தந்தை இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம்  ஹீரோவாக அறிமுகமான விஜய் சில ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் இதயங்களிலும் நுழைந்தார்.  


இன்று தென் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' படத்திற்காக நடிகர் விஜய் ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாகவும், அடுத்த படமான வாரிசு திரைப்படத்திற்கு 150 கோடிகள் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை என்றாலும், திரைப்பட தயாரிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் விஜய்யை நம்பி மெகா பட்ஜெட் படங்களை இயக்கத் தயாராக உள்ளனர். அந்த அளவுக்கு நடிகர் விஜய்யின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. 


கால் கலெக்‌ஷனில் ஆர்வம்


இப்படி ஜெட் வேகத்தில் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்து வரும் சூழலில், தன் கரியரின் தொடக்க காலம் முதலே கார், பைக் பிரியராக விஜய் வலம் வந்தபடி உள்ளார். விஜய்க்கு விலையுயர்ந்த கார், பைக் என்றால் அதிக பிரியம் உண்டு. இந்த கார் கலெக்‌ஷனை வைத்துக் கொள்வதில் இவரை மாஸ்டர் என்றே அழைக்கலாம்.


இங்கிலாந்தில் இருந்து விஜய்யால் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் அதிகம் பேசப்பட்டது. நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாததற்காக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு,  இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விஜய் வரிவிலக்கு கோரி மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு உரிய வரியும் செலுத்தினார். 


இத்தனை கார்களா?


ஆனால் இந்த சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தன் கார் கலெக்‌ஷனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகிறார். அப்படி விஜய் வைத்திருக்கும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்..



  1. டாடா எஸ்டேட் 1992 - 2000 மாடல்

  2. டொயோட்டா செரா 1990 - 1996 மாடல்

  3. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

  4. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம்

  5. BMW X6 - 2008–தற்போதைய மாடல்

  6. நிசான் எக்ஸ்-டிரெயில் - 2000

  7. ஆடி ஏ8

  8. பிரீமியர் 118 NE

  9. மினி கூப்பர் எஸ்


இத்தனை விலை உயர்ந்த கார்களை நடிகர் விஜய் வைத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


புறநகர சென்னை, பனையூரில் ஆடம்பர பங்களாவில் விஜய் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். சோதனை முடிவில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.