சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் இடமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இங்கு பாதுகாப்பு பணிக்காக கிறிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் தாய்மார்களின் உறவினர்களை அவதூறாக பேசுவதாகவும், நோயாளிகளுடன் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்காமல் தொடர்ந்து சிரமத்தில் ஆழ்த்தி வருவதாக கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு பணியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலம் அரசு மருத்துவமனை காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக நோயாளிகளுடன் இருப்பதற்கு ஒரு நபருக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம். அந்த அட்டை வைத்திருக்கும் நபர்கள் வெளியே உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு வந்துவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல முயற்சித்தால் அனுமதிக்காமல் ஒருமையில் பேசுவதாக குற்றம்சாட்டினர். மேலும் நோயாளிகளுடன் இருக்கும் நபர்கள் போலி அடையாள அட்டை தயாரிப்பதாக பொய்யாக தகவல்களை கூறி தரைக்குறைவாக பேசுவது கூறினர். பிரசவத்திற்காக தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் நாங்கள், இந்த இடைப்பட்ட ஓரிரு நாட்களில் போலி அடையாள அட்டை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். எனவே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு பணியாளர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். மேலும், குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது பணியாளர்கள் விசில் ஊதுவது, சத்தம் எழுப்புவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐசியூவில் உள்ளவர்களுக்கு இரண்டு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று கூறுகின்றனர். இதனால் அறுவை சிகிச்சை செய்த தாய்மார்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த பெண்களுடன் குறைந்தது இரண்டு நபர்கள் இருந்தால் கூட சிரமமாக உள்ளது. ஆனால் இவர்கள் ஒருவரை மட்டுமே அனுமதிப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதற்கும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.



இதனிடையே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்களை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் உடன் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்காமல் கதவை மூடிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவை நோயாளிகள் வெளியிட்டனர். அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களையும் நோயாளிடம் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி கேட்டை மூடிக்கொண்டதால் சிரமத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாதுகாப்பு பணியாளருக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து வாக்குவாதத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.