நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 68' படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தளபதி 68:


நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துவிட்டது.  லியோ பட வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டே பட ஷூட்டிங் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கோலிவுட் வட்டாரத்தில் எழுந்து வருகின்றன. 


தளபதி 68 படத்தை இந்த இயக்குநர் தான் இயக்குவார் எனப் பலரது பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


வெங்கட் பிரபு இயக்கமா?


கடந்த மே 12ஆம் தேதி தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா - க்ரித்தி ஷெட்டி நடித்த 'கஸ்டடி' படம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து, விஜய் அல்லது அஜித் படங்களை வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், அவர் மன்மத லீலை, கஸ்டடி என வளரும் நடிகர்களின் படங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த இயக்குநர் பட்டியலில் வெங்கட்பிரபுவின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும் வெங்கட் பிரபுவின் ஹிட் கூட்டணியான யுவன் ஷங்கர் ராஜாவே இந்தப் படத்துக்கும் இசையமைக்க உள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


20 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்:


2003ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ படத்துக்கு யுவன் இறுதியாக பாடல்கள் அமைத்திருந்த நிலையில், அதன் பிறகு அவர் விஜய்யுடன் கூட்டணி சேரவில்லை. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விஜய் யுவனுடன் இணைய உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்து வருகிறது.


முன்னதாக வீர சிம்ஹா ரெட்டி பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி உடன் விஜய் இணைவதாகத் தகவல்கள் கடந்த மாதம் வெளியாகின. மேலும் கோபிசந்த் விஜய்யிடம் ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் எண்டெர்டெய்னர் கதையை சொன்னதாகவும், விஜய் இந்தக் கதையைக் கேட்டு ஓகே சொல்லியதாகவும் தளபதி 68 படத்துக்காக கிட்டத்தட்ட கோபிசந்தை உறுதி செய்துவிட்டதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது.


மேலும் இந்தப் படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.