வாகன நெரிசலால் லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மிகவும் எளிமையான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர். அதனால்தான் 80 வயதையை கடந்தும் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகில் இன்னும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். 


அதேபோல், இவரது சிறந்த பண்புகளில் ஒன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் என்றும் தாமதமாக செல்ல விரும்பமாட்டார். இந்தநிலையில், சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது நேரத்தை வீணடிக்க விரும்பாத அமிதாப் பச்சன் தனது ரசிகர் ஒருவரிடம் உதவி கேட்டு அவரது பைக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார்.


இதையடுத்து, பெயர் தெரியாத அந்த நபருக்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “உங்களை எனக்கு யாரென்று தெரியாது, ஆனால் நீங்கள் ஒரு உறவினரை போல என்னை சரியான நேரத்தில் காப்பாற்றி, நான் பணியாற்றும் இடத்திற்கு அழைத்து சென்றீர்கள். நீங்கள் இல்லை என்றால் நான் சரியான நேரத்தில் சென்றிருக்க முடியாது. மிக்க நன்றி நண்பரே!” என குறிப்பிட்டிருந்தார். 






அமிதாப் பச்சன் தற்போது பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அப்போது ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில், மும்பையின் நாஸ்தானபுட் நெரிசலில் சிக்கி கொண்டார். இதனால் அமிதாப் பச்சன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிர்த்துள்ளார். அப்போது அவ்வழியாக பைக் ஓட்டுநர் ஒருவர் வந்தபோது அமிதாப் பச்சன் அவரிடம் கோரிக்கை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் உற்சாகமான அமிதாப் பச்சன் இந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமிதாப்பும், அவருக்கு உதவி செய்த இருசக்கர வாகன ஓட்டியும் ஹெல்மெட் அணியவில்லை.