வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 (Thalapathy 68) படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் நடிகர் விஜய்யுடன் நடிகர் பிரஷாந்த் இணைய இருபதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


தளபதி 68


நடிகர் விஜய்யின் 68ஆவது படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு  உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நிலையில் ஏ.ஜி. எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.


மேலும் பல


சென்னையில் நடைபெற்ற தளபதி 68 படத்தின் பூஜையில் பல்வேறு மூத்த தமிழ் நடிகர்கள் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.  ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரோடு நடிகர் மைக் மோகன் முக்கிய கேரக்டரில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பல்வேறு விதமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பது படம் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.


டாப் ஸ்டார் பிரஷாந்த்!


மேற்சொன்ன நடிகர்களைத் தவிர்த்து தளபதி 68 படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இணைப்பாக வந்து சேர்ந்துள்ளார் நடிகர் பிரஷாந்த். 90களின் சாக்லெட் பாயாக இருந்து பல்வேறு ரொமாண்டிக் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் பிரஷாந்த். ஆனால் சினிமா வாய்ப்புகள் குறைந்து சில காலம் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பிரஷாந்த் நடித்து கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜானி. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் பிரஷாந்த் நடிக்க இருக்கும் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


அவரசப்பட்டுட்டீங்களே பிரஷாந்த்


தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய செய்தியையும், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரஷாந்த். படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடுவதற்கு முன்பாகவேஎ பிரஷாந்த் இந்த தகவலை வெளியிட்டது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், தளபதி 68இன் படப்பிடிப்பு நாளை முதல் நடைபெற இருக்கிறது என்றும், மேலும் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியான பின் தளபதி 68 படம் குறித்தான கூடுதல் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகும் எனவும் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.


லியோ


அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய், த்ரிஷா, அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.