ஒகேனக்கல் வனச் சரகத்தில், கோவில்பள்ளம் பகுதியில் ரூ.6 இலட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட குளத்தில், தினமும் யானை கூட்டம், பன்றிகள், செந்நாய் கூட்டங்கள் தண்ணீர் குடிப்பதும், குளித்தும் மகிழ்ந்து விட்டு செல்கின்றது.

 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட வனச் சரகங்கள் அமைந்துள்ளது. தருமபுரி மாவட்ட முழுவதும் அதிகப்படியான வனப் பகுதிகள் இருப்பதால், இந்த வனப் பகுதிகளில் யானை, மயில், காட்டுப் பன்றிகள், செந்நாய், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட விலங்கினங்கள் வசித்து வருகிறது. வனப் பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதி வனத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை இணைக்கும் வனப் பகுதி இருப்பதால், யானைகள் வலசைப்போதல் ஏற்படுகிறது. ஆனால் வறட்சியான காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள், வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகிறது. இதனால் விலங்கு, மனித மோதல், விவசாய பயிர்கள் சேதம் உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படும், இதனை தடுப்பதற்கு வனத் துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 

தருமபுரி மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கவும் வன விலங்குகளை பாதுகாக்கவும் வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்படுகிறது.

 

இதனை முற்றிலும் இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் மூலம் ஒகேனக்கல் வனப் பகுதியில், கோவில்பள்ளம் பகுதியில் கடந்த ஆண்டு 2 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. மேலும் நடைபாண்டில் கூடுதலாக ரூ.6 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தண்ணீர் சோலார் மூலம் இந்த தொட்டியில் நிரப்பப்படுகிறது.



 

இந்நிலையில் தினமும் தொட்டிகளில் யானைக் கூட்டங்கள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளும் தண்ணீர் குடித்தும், குளித்தும் மகிழ்ந்து விட்டு செல்கிறது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது குளத்தில் விலங்குகள் தண்ணீர் குடித்தும், குளித்துவிட்டு செல்லும் காட்சிகளை, தருமபுரி வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் காண்போரை கவர்ந்துள்ளது. இதன் மூலம், உணவு தேடி வன விலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெளியில் வருவதை தடுக்க இயலும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.