தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. பொங்கல் வெளியீடாக வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க படத்தில் இருந்து வெளியிடப்பட்ட ‘ தீ தளபதி’ ‘ரஞ்சிதமே’ ஆகிய இரு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.
இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் 67வது பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பிரசாத் லேப்பில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட்டுக்காக இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுவதால் 2 செட்களில் ஒன்று முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை முதல் 3 நாட்களுக்கு ப்ரோமோ ஷூட் நடைபெற்று படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் காஷ்மீரில் நடக்கவுள்ளது.
தளபதி 67 - சொன்னதும் நடந்ததும் :
இந்த ப்ராஜெக்ட் குறித்து பேச தொடங்கிய நாள் முதல், சமந்தா வில்லியாகவும், த்ரிஷா ஹீரோயினாகவும் மற்றும் இவர்களுடன் கேஜிஎஃப் படத்தில் அதிரா வேடத்தில் நடித்த சஞ்சய் தத், மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, த்ரிஷாதான் இந்த படத்தின் கதாநாயகி என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் இப்படம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் அடங்கும் என்ற இரு பெரும் புதிய அப்டேட்கள் திரைப்பட விமர்சகர்கள் மூலம் வெளியாகிவுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து, கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய 4 படங்களில் நடித்துள்ளனர். இதில் கில்லி, திருப்பாச்சி ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், மற்ற இரண்டு படங்கள் மண்னை கவ்வியது என்பது குறிப்பிடதக்கது. இப்போது கோலிவுட்டின் சூப்பர் ரீல் ஜோடியான விஜயும் த்ரிஷாவும் 14 வருடங்கள் கழித்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாக போகும் இப்படமானது தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது.
சமீபத்தில் ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்ற ஆங்கில படத்தின் உரிமையை லோகேஷ் பெற்றிருந்தார் என்பதால், அப்படத்தின் தழுவலாக தளபதி 67 ஆக உருவாகவுள்ளதா அல்லது வேறு எதுவும் கதையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.