நடிகர் விஜய் பிறந்த நாளில் தளபதி – 67 பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதவும் தகவல்.
நடிகர் விஜய் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரது சினிமா பற்றிய அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் மிதக்கச் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு அறிவிப்பும் இணையத்தையே ஆக்கிரமிக்கும் அளவிற்கு அவரது ரசிகர்களின் செயல்பாடு இந்திய அளவிலும் உலக அளவிலும் டிரெண்ட் ஆக்கிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்த நாள் வருகிற ஜூன் 22ம் தேதி வரவிருக்கிறது. அதையொட்டி நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி – 67 திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, தமிழ் சினிமாவின் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுகொண்டு இருக்கும் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தினைக் கொண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஜய் அவர்களும் ஏற்கனவே ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் வெளியானபோது கொரோனோ கால விதிமுறைகளால் சினிமா ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்காளா என்ற அச்சம் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் இருந்தது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் வெளியான திரைப்படம், சினிமா ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்குள் வரவழைத்தது மட்டுமில்லாமல் பிரம்மாண்ட வெற்றிப்படமாகவும் அமைந்தது.
மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 242.5 கோடி ரூபாய் வசூல் செய்து, பக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டும் அடித்தது. இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 22-இல் நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்த நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் கோகேஷுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் இந்த கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் ஹோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடிகர் விஜய் ஏற்கனவே இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி - 66-இல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.