ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


அதேபோல் இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எந்தவிதா ப்ராஸ்தடிக் மேக்கப்பும் இல்லாமல், ஸ்பெஷல் எஃபக்ட் இல்லாமல், கங்கனாவின் மன உறுதியே தலைவி படத்தின் இந்த லுக்கிற்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.



இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிவடைந்து கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தியேட்டர்கள் திறந்துள்ள நிலையில் நிலையில் சமீபத்தில் இந்த படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.



இது குறித்து பேசிய கங்கனா, ’’ஜெயலலிதாவின் பாடல்களிலிருந்து சின்னச் சின்ன தருணங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார், மேலும் அவரது அசைவுகளை உன்னிப்பாக கவனித்து உள்வாங்க சொன்னார். "ஜெயா அம்மாவின் பாடல்கள் வித்யாசமானவை, ஏனென்றால் அவை பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அந்த தடங்களின் கலவையாகும். ஜெயா அம்மா மற்றும் எம்ஜிஆர் 60 முதல் 70 பாடல்களை ஒன்றாக கொடுத்துள்ளனர். அவர்கள் பல வருடங்கள் ஒன்றாக வேலை செய்தனர், ஆனால் நாங்கள் அதை வெறும் நான்கே நாட்களில் செய்ய வேண்டி இருந்தது. ஒரு நாளில், நான் பல தோற்றங்கள் மற்றும் சிகை அலங்காரங்கள் மாற்ற வேண்டியிருக்கும். " என்றார்


இந்நிலையில் தலைவி படத்தில் இடம் பெற்ற ‘உந்தன் கண்களில் என்னடியோ’ பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த அழகிய பாடல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புரமோஷன் விழாவுக்காக கங்கனா ரனாவத் சென்னை வரவிருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய், அரவிந்த்சாமி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


Prabhas | பாகுபலி எங்கே? குண்டான பிரபாஸை ட்ரோல் செய்யும் இணையவாசிகள்!