திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜா, துபாயில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கோவை மற்றும் மதுரை அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 3 பயணிகள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். ஆனால் அவர்களிடம் எந்த தங்கமும் இல்லை என கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.




அப்போது அந்த விமானத்தில் வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (34) என்பவரது உடமைகளை சோதனை செய்ததில் 1.5 கிலோ தங்கத்தை எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 73 லட்சம் ஆகும். இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக் தாவூத் (32) என்பவர் ஆசனவாயில் மறைத்து 575 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 29.5 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 1.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் பயணிகள் கடத்தல் தங்கத்தை எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.




கொரோனா காலத்தில் தங்கம் கடத்தல் குறைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 11.5 கிலோ தங்கமும், அடுத்த சில நாட்களில் 8 கிலோ தங்கமும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால்  பறிமுதல் செய்யப்பட்டதும், தங்கம் கடத்தி வருவதற்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளை கேட்டபோது, கடந்த சில வாரங்களாக தங்கம், போதை பொருள்கள் கடத்துவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும்  தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். குறிப்பாக  கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.