மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி, நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கங்கனா நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் ரோலில் கங்கனாவை நடிக்க வைத்தது சரியான தேர்வு என பலர் பாராட்டி வருகின்றனர். இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை. அதோடு, தலைவி படத்தில் வரும் காட்சிகள் சில உண்மைக்கு புறம்பாக இருப்பதாக ஜெயக்குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.


சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து அவமானப்படுத்தப்பட்டதாக படத்தில் காட்டபபட்டிருப்பதாக ஒரு காட்சி வருகிறது, ஆனால் அதிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. நடிகையாக இருந்த ஜெயலலிதா, எப்படி அரசியல் தலைவர் ஆனார் என்பது தான் தலைவி படத்தின் கரு. ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த இன்னும் பல முக்கியமான நிகழ்வுகளை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். அவ்வளவு சுவாரஸ்யமும், சர்ச்சைகளும் உள்ளடங்கியதுதான் அவரது வாழ்க்கை. அதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



ஜெயலலிதாவின் வாழ்க்கையில் காட்டுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். தலைவி படத்தை பார்த்த பலர் பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, இதை சேர்த்திருக்கலாம், அதை சேர்த்திருக்கலாம் என கருத்து கூறி வருகின்றனராம். அதனால் தான் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனால் தலைவி இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பாரா என்பதுதான் சந்தேகம். ஏனென்றால், சமீபத்தில் நடந்த தலைவி ப்ரோமோஷன் விழாவில் பேசிய கங்கனா, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளேன். அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க ஆசை. பிரபாஸுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென நினைக்கிறேன். பிரபாஸுடன் நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு பூரி ஜெகன்னாதனிடம் பலமுறை கேட்டு விட்டேன். தொடர்ந்து கேட்டு வருகிறேன் என தெரிவித்தார்.



ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் நடித்ததை போல், அடுத்தபடியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தை தானே இயக்கி நடிக்க போவதாக கங்கனா கூறி உள்ளார். அதனால் தலைவி 2 படத்தில் ஜெயலலிதா ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசிக்க துவங்கி விட்டது. 


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, நான் ஒன்றும் தேசியவாதியோ, அரசியல்வாதியோ இல்லை. பொறுப்புள்ள சாதாரண குடிமகள். நான் அரசியலில் நுழைய வேண்டும் என்றால் நிறைய மக்கள் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது நான் நடிகையாக இருப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. ஒருவேளை நாளை மக்கள் என்னை விரும்பி, எனக்கு ஆதரவு அளித்தால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன் என்றார். அடுத்தடுத்து நிறைய படங்கள், அரசியலில் நுழையும் கனவு என கங்கனா பல திட்டங்களை வைத்திருப்பதால் தலைவி 2-இல் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.