தமிழ் திரையுலகின் சிறந்த, தனித்துவமான நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் 'தலைவாசல்' விஜய், இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகிலும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியவர். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் முத்திரை பதித்த தலைவாசல் விஜய் திரைப்பட துறையில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் :


1992ம் ஆண்டு வெளியான 'தலைவாசல்' திரைப்படம் மூலம் அறிமுகமானதால் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது. தேவர்மகன், காதலுக்கு மரியாதை, காதலே நிம்மதி, காதல் கோட்டை, துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும், உன்னை நினைத்து, அமர்க்களம், காசி, மகாநதி இப்படி காலத்தால் அழியாத ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயமாக தலைவாசல் விஜயின் பங்களிப்பு இருக்கும். எந்த வித சினிமா பின்புலம் இல்லாமல் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து ஒரு மிக சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அந்தஸ்தை தனது உழைப்பாலும், விடா முயற்சியாலும் மட்டுமே பெற்றவர். 


 கானா மூலம் கவனம் ஈர்த்தவர் :


30 ஆண்டுகளில் சுமார் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தலைவாசல் விஜய் கானா பாடல்களின் நடித்ததன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி... கவலைப்படாதே  சகோதரா... என்ற பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஹீரோ, அப்பா, நண்பன், வில்லன், சகோதரன், போலீஸ் அதிகாரி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அத்தனை யதார்த்தமாக நடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.  


சின்னத்திரை பிரவேசம் :


அழகு, கங்கா யமுனா சரஸ்வதி உள்ளிட்ட மெகா சீரியல்களிலும் நடிக்க தவறாத தலைவாசல் விஜய் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். சின்ன சின்ன கதாபாத்திரம் கொடுக்கபட்டாலும் அதிலும்  தனது 100 % பங்களிப்பை கொடுத்து ரசிகர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறாதவர். மலையாளத்தில் வெளியான 'யுகபுருஷன்' திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை கேரளா அரசு வழங்கி கவுரவித்தது. 



பன்முக கலைஞன் :


மருத்துவராக வேண்டும் என்ற அவருடைய கனவு பல காரணங்களால் கனவாகவே போனது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. 'நீல மாலா' என தூர்தர்ஷன் தொடர் மூலம் தனது நடிப்பை தொடங்கினார்.


தலைவாசல் விஜய்க்கு திருமணமாகி ஜெயவீனா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தமிழ்நாடு அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார்.  தலைவாசல் விஜய் ஒரு நடிகர் மட்டுமின்றி நடன கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், ஜிம்னாசிஸ்ட் என பல பிரிவுகளில் திறமையானவர். தனித்துவமான நடிப்பு உடல்மொழியால் கவனமீர்த்த தலைவாசல் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!