சீனே கம், பா, ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய பால்கி தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கூமர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஷபானா ஆஸ்மி, அபிஷேக் பச்சன், சயாமி கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தனது ஒரு கையை இழந்த நிலையில் தனது முயற்சியால் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஒருவரின் கதையை படமாக இயக்கியிருக்கிறார் பால்கி.
பால்கி
பாலிவுட்டின் சற்று வேறுபட்ட இயக்குநர் பால்கி. தனது ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு புதிய கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு காட்டுவார். கி & கா சீனே கம், ஷமிதாப், பேட்மேன், ஆகியப் படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது பால்கி தயாரித்து இயக்கியிருக்கும் படம் கூமர். ஷபானா ஆஸ்மி, அபிஷேக் பச்சன், சயாமி கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கூடுதலாக இந்தப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தை அசரடித்து வருகிறது.
கூமர் ட்ரெய்லர் எப்படி?
கிரிக்கெட்டை மையப்படுத்தியக் கதை கூமர். ஆனால் வழக்கமான கிரிக்கெட் கதை அல்ல இது. ஒரு விபத்தில் தனது ஒரு கையை இழக்கும் பந்து வீச்சாளர் ஒருவர் தனது ஒரு கையால் கிரிக்கெட் விளையாட்டில் பங்குபெறும் கதை. தனது வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த ஒருவராக அபிஷேக் பச்சன் இந்தப் படத்தில் தோற்றமளிக்கிறார். தான் பார்க்காத வெற்றியை இந்தப் பெண்ணின் மூலம் பார்க்க ஆசைப்பட்டு அவருக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த விளையாட்டில் தனது ஒரு கையுடன் அந்தப் பெண் கிரிக்கெட்டிலும் அபிஷேக் பச்சன் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றாரா என்பதே இந்தப் படத்தின் கதை.
நிஜக்கதையா ?
கரோலி டாகாஸ் என்கிற இரண்டு முறை ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற ஹங்கேரிய துப்பாக்கிச் சுடும் வீரரின் வாழ்க்கையில் இருந்து கவரப்பட்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பால்கி. வலது கை பயன்பாட்டாளரான அவர் ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்து பின் தனது இடது கையால் துப்பாக்கிச் சுடுவதை பழகி ஒலிம்பிக்ஸின் இரண்டு தங்கங்களையும் வென்றுள்ளார்.
இதனை ஒரு சாரமாக எடுத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒருவருக்கு நேர்ந்தால் அவர் அதனை எப்படி எதிர்கொள்வார் என்கிற தனது கற்பனையில் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் பால்கி. இந்தப் படத்திற்காக புதிதாக கூமர் என்கிற ஒரு பந்துவீச்சு முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள் படத்தின் எழுத்தாளர்கள்