ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது 72 வயதில் தான் நடிக்கும் படங்களில் புதிய ஃபார்முலா ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். வழக்கம்போல் ரஜினிக்கு முன்னால் இந்த ஃபார்முலாவில் வெற்றிபெற்றது உலகநாயகன் கமல்ஹாசன்.


தலைவர் 170


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் திரைப்படம் தலைவர் 170. ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படக்குழுவை வரிசையாக அறிவித்து வந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ். இதன்படி  இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், நடிகர் ராணா டகுபதி, நடிகைகள் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


பிரம்மாண்ட படக்குழு


பொதுவாகவே படங்களில் சோலோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தனது வழக்கமான ஃபார்முலாவை உடைத்து மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் ஷிவராஜ் குமார் உள்ளிட்ட பிற மொழி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். இந்த காம்பினேஷன் ரசிகர்களிடன் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது. தற்போது தலைவர் 170 படத்தின் மிகப்பெரிய படக்குழு இந்தப் படமும் ஜெயிலர் திரைப்படம் போல் ரஜினியை மட்டும் மாஸாக காட்டாமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தனது 72-வது வயதில்  மல்டி ஸ்டாரர் கதைகளை ரஜினி தேர்வு செய்து நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.


கமல்ஹாசனின் ஃபார்முலா


சமீப காலங்களில் படங்களில் பிற மொழிகளில் இருந்து நடிகர்கள் நடித்து வருவது அந்த படங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கவும் அனைத்து மொழி ரசிகர்களிடம் அந்த படத்தை வெற்றிபெறச் செய்யவும் மிக அவசியமானதாக இருக்கிறது. மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர்களை வெவ்வேறு நடிகர்களுடன்  நடித்து பார்க்க வேண்டும் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதன்காரணத்தினால் பெரும்பாலான படங்களில் முடிந்த அளவிற்கு பிற மொழிகளில் பிரபலமான நடிகர்களை உள்ளே கொண்டுவர முயற்சிகள் எடுக்கிறார்கள் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் நடிகர் கமல்ஹாசன். தனது வாழ்நாளில் இந்திய சினிமாவின் பல்வேறு கலைஞர்களுடன் வேலை செய்திருக்கும் கமல் சமீபத்தில் தான் நடித்த விக்ரம் திரைப்படத்தில் பல்வேறு இளம் நடிகர்களுடம் சேர்ந்து நடித்திருந்தார். விக்ரம் படத்தின் முதல்பாதி முழுவதும் ஃபகத் ஃபாசில் மட்டுமே ரசிகர்களை ஈர்த்தார் என்றாலும் கமலுக்கு ஏற்ற மாஸான தருணங்கள் இந்தப் படத்தில் இருந்தன. இதே போல் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் இதே ஃபார்முலாவை ஃபாலோ செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.


தற்போது தலைவர் 170 படத்திலும் இதே ஃபார்முலாவை ரஜினி ஃபாலோ செய்வது நிச்சயம் அவருக்கும் ஜெயிலர் போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கிற நம்பிக்கையால் இருக்கலாம்.