Shubman Gill: ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க விரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில், ரோகித் சர்மா உடன் தொடக்க விரராக களமிறங்குவது யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
நல்ல ஃபார்மில் தொடரும் கில்:
24 வயதான வலது கை பேட்ஸ்-மேன் ஆன சுப்மன் கில், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியிலிருந்தே சிறப்பான ஃபார்மில் தொடர்கிறார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம், ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், உள்ளூரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல, இந்திய அணியில் கில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோதே, அவர் மட்டும் மாஸ்க் அணிந்திருந்தார். இதனால், அவருக்கு ஏற்கனவே உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் யார்?
கேப்டன் ரோகித் சர்மா உடன் சுப்மன் கில் தான் தொடக்க விரராக களமிறங்குவதாக இந்திய அணி திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாட முடியாது என கூறப்படுவதால், தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசியக் கோப்பை முதற்கொண்டு மிடில் ஆர்டரில் விளையாடி வரும் கே. எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அதேநேரம், வலது மற்றும் இடது கை கூட்டணியை கருத்தில் கொண்டு, இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்புள்ளது. இதனிடையே, சுப்மன் கில் விரைவாக குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இணைய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.