நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு (டிசம்பர்,12,2023) ‘தலைவர் 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 




தலைவர் 170


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது (Thalaivar 170) படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த. செ.ஞானவேல் இப்படத்தை இயக்க அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்து வருகிறார்கள்.  நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்:


 ஞானவேல் ரஜினிகாந்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படமும் ஜெய்பீம் போல சமூகம் சார்ந்த படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.


இந்த படத்தில் ரஜினிகாந்துடன் 33 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் உடன் இணைந்து நடிக்கிறார். இந்த படம் மூலமாக அமிதாப்பச்சன் முதன் முறையாக தமிழ் படத்தில் நேரடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. கேரளாவில் இந்தப் படத்திற்காக பூஜை போடப்பட்டது. படபிடிப்பு நேரங்களைத் தவிர்த்து கேரள திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் அவ்வபோது வெளியாகி வந்தன.


ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்திற்கான எதிர்பார்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக மோகன்லால் ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த காரணத்தினால், ஜெயிலர் படம் தமிழைத் தவிர்த்து பிற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது தலைவர் 170 படத்தில் பல்வேறு நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படத்தைப் போல் இந்தப் படமும் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதை உறுதியாக நம்பலாம்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கிரிகெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அடுத்த ஆண்டு பொங்கலன்று இந்தப் படம் வெளியாக இருக்கிறது. 


லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் :


லோகேஷ் கனகராஜ் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள 'தலைவர் 171' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பு வெளியான நாள் முதல் இருந்து எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என வெளியான தகவல் உண்மையா என்பது தெரியவில்லை. அதே போல இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாமல் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. மேலும்,  'யூனிவர்சிட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திருட்டு பயலே, நான் அவன் இல்லை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஹரோவாக நடித்த நடிகர் ஜீவன் இதில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.