ஒரு முக்கிய அறிவிப்பு இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது. அதன்படி ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இப்போது நெல்சனின் “ஜெயிலர்” படத்தில் பிசியாக இருந்து வரும், ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார்


நேற்று மாலை லைகா நிறுவனத்தின் ட்வீட் வந்தவுடன் பலரும் ஆர்வமடைந்தனர். பொன்னியின் செல்வன் குறித்த அப்டேட் வருமா ? அல்லது அஜித்தின் 62 ஆவது படம் குறித்த அப்டேட் வருமா ? என்று அவரவர்களின் எதிர்ப்பார்ப்பை கமெண்ட் பாக்ஸில் குவித்தனர். மக்கள் ஒன்றை யோசிக்க, லைகா எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டு ரஜினியின் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க செய்துள்ளது.


தலைவர் 170 படக்குழுவினர் 


சூர்யா நடிப்பில் நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், தலைவர் 170 படத்தை இயக்கவுள்ளார்.




 
சூர்யா நடித்த ஜெய் பீம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, சமூகத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. மறுபக்கம், பல அரசியல் பிரச்சினைகளில் சிக்கி பேசு பொருளாக மாறியது.


பல காலங்களாக பொழுபோக்கு அம்சமாகவே இருந்து வந்த சினிமா, சமீப காலங்களில், அரசியல் பேசும் களமாக மாறிவிட்டது.  பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுடன் ரஜினி இணைகிறார். இவர் நடிக்கும் படம், ஜெய்பீம் போன்ற கதை அமைப்பை கொண்ட படமா அல்லது, மாஸ் ஹீரோவுக்கான ஆக்‌ஷன் படமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


ஆல் இன் ஆல் அனிருத்


3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிரூத், தமிழ் சினிமாவில் வேற லெவல் சம்பவங்களை செய்து வருகிறார். விக்ரம் படத்தில், ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பின்னணி இசையை அமைத்து கெத்து காட்டியிருந்தார்.




பொதுவாக அனைத்து இசையமைப்பாளர்கள் மீதும், காப்பி அடித்து மியூசிக் போடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கும். அந்த குற்றசாட்டுக்கு அனிருத் விதிவிளக்கல்ல. இருப்பினும், அவரின் ரசிகர்களை அனிருத் எப்போதும் ஏமாற்றம் அடைய செய்வதில்லை.


தற்போது, ஜெயிலர், இந்தியன் 2 , லியோ, ஏகே 62, தனுஷின் டி 50, ஜவான், என்டிஆர் 30 ஆகிய பல படங்கள், அனியின் ஸ்டுடியோவின் வாசலில் வரிசை கட்டி நிற்க, இத்துடன் தலைவர் 170 படமும் இணைகிறது.