நடிகர் விஜய்யின் 67-ஆவது படத்தை, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படம் குறித்த சுட சுட அப்டேட் ஒன்றை நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்:


ஹாலிவுட் திரையுலகில் பிற பட கதைகளை வேறு ஒரு கதையுடன் இணைத்து மார்வல், டிசி என ஒரு புது கதைகளத்தை உருவாக்குவது வழக்கம். இதே போன்ற ஒரு உலகைத்தான் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மூலம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். 2019-ல் வெளியான கைதி படத்தின் கதாப்பாத்திரங்களை, இந்தாண்டில் வெளியான விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றி, அவர்களுக்கு ஏற்றார் போல் கதைக்களங்களையும் அமைத்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) எனப் பெயரும் வைக்கப்பட்டது. 




கைதி படத்தின் மூலம் ஹிட் கொடுத்த லோகேஷ், அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து, மாஸ்டர் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.


இப்படத்திற்கு தற்போது எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த சினிமாடிக் யுனிவர்ஸில், “மாஸ்டர் படத்தின் ஜேடி கதாப்பாத்திரத்திற்கு இடம் உண்டா?” என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு பதில் அளிப்பது போன்ற ஒரு செய்தியை, நடிகர் நரேன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.


எல் சி யுவில் தளபதி 67ஆவது படம்!


பொங்கலன்று வெளியாகும்  ‘வாரிசு’ திரைப்படத்தையடுத்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்,  விஜய்யின்   67ஆவது படமாக உருவாகிறது. விக்ரம் படத்தில் வேலை மற்றும் குடும்பத்தை இழந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தவர் நரேன். சமீபத்தில் ஒரு நேர்கானலில் கலந்து கொண்ட அவர், விஜயின்  67ஆவது படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்சில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் அவர் இடம் பெறவில்லை எனவும், கைதி-2 படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாகவும் நரேன் தெரிவித்துள்ளார். இதனால், சினிமா ரசிகர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.


 






தளபதி 67-ல் இவர்களெல்லாம் இருக்கிறார்களா?


ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள், தளபதியின் 67ஆவது படமும் ஒன்று லோகேஷ் கனகராஜ் தளபதியின் 67ஆவது படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து, பல வகையான தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. இப்படத்தில், சஞ்சய் தத், நிவின் பாலி, ப்ருத்விராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, பயங்கர ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் ட்ராமாவாக இப்படம் இருக்கும் என்றும் திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. எது எப்படியோ, இப்போது தளபதியும் லோகேஷ் யுனிவர்ஸில் இருப்பது உறுதியாகிவிட்டது என ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.