`தல’ அஜித் பைக் ஓட்டுவதில் அலாதியான ஆர்வம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அவர் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் பைக் ரைட்களில் செல்வதில் தனது நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தனது சர்வதேச பைக் பயணத்திற்காக, சமீபத்தில் அஜித்தைப் போலவே பைக் மீது ஆர்வம் கொண்டவரும், ஃபேஷன் டிசைனருமான மாரல் யாசர்லூ என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். மாரல் யாசர்லூ தனது பைக்கில் 64 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். அவருடனான சந்திப்பில் அஜித் தனது சர்வதேச பைக் பயணம் குறித்து டிப்ஸ் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சில மணி நேரங்கள் நடந்த இந்தச் சந்திப்பில், அஜித் தனது சந்தேகங்களைக் கேட்டு, அவற்றிற்கான விடைகளைப் பெற்றுக் கொண்டார். 


`வலிமை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகளுக்காக படக்குழுவினருடன் ரஷ்யா சென்றிருந்தார் நடிகர் அஜித். படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ரஷ்யாவில் சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் தனது பைக்கில் பயணம் சென்றுள்ளார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில், அஜித் விரைவில் சர்வதேச அளவில் தன்னுடைய பைக் பயணத்தை நிகழ்த்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. 



தான் திட்டமிட்டுள்ள இந்தப் பயணத்திற்காக, அஜித் தன்னைப் போலவே சக பைக் ரைடரான மாரல் யாசர்லூவைச் சந்தித்துள்ளார். அவருடைய பயணங்கள் குறித்தும், பொருள்களை எடுத்துச் சென்றதைக் குறித்தும் அவருடன் பேசி, சில தகவல்களைப் பெற்றுள்ளார் அஜித். 


நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டரில் அஜித், மாரல் யாசர்லூ ஆகியோரின் படத்தைப் பதிவிட்டு, `மாரல் தனது பைக்கில் உலகைத் தனியாகப் பயணித்து, சுற்றிப் பார்த்தவர். அவர் 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் தனது பயணத்தில் கண்டிருக்கிறார். டெல்லியில் அவரைச் சந்தித்த அஜித் குமார் அவருடைய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டறிந்து, தன்னுடைய சர்வதேச பைக் பயணத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார். 


அஜித்துடனான சந்திப்பு குறித்து, மாரல் யாசர்லூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். `பி.எம்.டபிள்யூ நிறுவனம் என்னிடம் சக பைக் ரைடர் அஜித் குமாரை அறிமுகப்படுத்தி, அவருக்கு எனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் இருவரும் மெசேஜ் செய்து, எங்கள் இருவருக்கும் பொருந்தும்படியான நேரத்தைத் தேர்வு செய்து சந்தித்தோம். அவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரை மக்கள் இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை எங்கள் படங்கள் வைரலான பிறகே உணர்ந்துகொண்டேன். நான் மனிதர்களின் தொழில் அடிப்படையில் அவர்களை அணுகுவதில்லை. நாம் என்ன தொழில் செய்தாலும், இறுதியில் நாம் மனிதர்களாக எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியம்" என்று கூறியுள்ளார்.



தொடர்ந்து அவர், “இதனைத் `தல’ ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகருடனான எனது அனுபவம் அருமையாக இருந்தது. அவர் பணிவு மிக்கவராகவும், அன்பானவராகவும், மிகுந்த மரியாதை கொண்டவருமாக இருந்தார். அவரை வெறும் நடிகராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மனிதராக அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் சமூக வலைத்தளங்களில் இல்லை என்பதால் அவருடைய தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு பகிரப்பட்டிருக்கும் அவரது படங்கள், அவர் அனுமதியோடு பகிரப்பட்டவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.