வலிமைக்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள ‘தல 61’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டின் ரீமேக்கான ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில், ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோன, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து பிரச்னைகளும் தீர்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு பணிகள் உள்ளன.
இந்த நிலையில், இதே கூட்டணி மூன்றாவது முறையாக இணைவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ‘தல61’ படம் குறித்து அஜித் ரசிகர்கள் எதோ ஒரு தகவலை வெளியிட்டு, அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில், தல61 படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறி, ஜிப்ரானின் பழைய ட்விட்டை தற்போது ஷேர் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.
2019 மார்ச் 31ஆம் தேதி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடின்ப்பின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த டுவிட்டில், அஜித் சார், “நாம் சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ கூறியதாக ஜிப்ரான் பதிவிட்டிருந்தார். இதைவைத்துக்கொண்டு, தல 61 படத்தின் இசை ஜிப்ரான் என்று ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்தாலும், முதல் இரு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே மியூசிக் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் என்று அஜித் ரசிகர்கள் டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளனர்.
‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பல சாதனைகள் படைத்தது குறிப்பிடத்தக்கது.
வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, அக்டோபருக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
90 லட்சம் பார்வை...ட்ரெண்டிங்கில் நம்பர் ஓன் - ‛நாங்க வேற மாறி ’ என மீண்டும் நிரூபித்த வலிமை!