சாதிய பாகுபாட்டை தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளாதவர்கள் மிக குறைவானவர்கள் தான். சாதாரன மக்கள் மட்டும் இல்லை நடிகர்களும் தீண்டாமையை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பா.ரஞ்சித் இயக்கிய படங்களில் நடித்த ஒரே காரணத்திற்காக தங்களுக்கு நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்று சில நடிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறை தீண்டாமையை எதிர்கொண்டதாக சொல்லப்படுவது தனது காமெடிகளால் அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகர் யோகிபாபு.
யோகிபாபு
சந்தானம் , சூரி ஆகியவர்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் காமெடியனாக உச்சத்தை தொட்டவர் என்றால் யோகிபாபுவை சொல்லலாம். முந்தைய இரண்டு நடிகர்களின் எந்த தாக்கமும் இல்லாமல் தனக்கென ஒரு தனி நகைச்சுவை பாணியை கொண்டவர். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தொடங்கிய இவரது கேரியர் இன்று இவரை கலாய்ப்பதற்கு நான்கு சின்ன காமெடியன்கள் சேர்ந்து நடிக்கு வகையில் நடிப்பில் சீனியராகி இருக்கிறார்.
அதே நேரத்தில் பெரிய பெரிய ஸ்டார்களின் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் ஆனால் யோகி பாபுவின் கால் ஷீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் வரும் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். சின்ன படமோ பெரிய படமோ யோகி பாபு இருந்தால் ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைக்கலாம் என்கிற நம்பிக்கையை தன்மேல் உருவாக்கி இருக்கிறார்.
நாங்க ஹீரோவா நடிச்சா ஒத்துக்க மாட்டீங்களா
காமெடியனாக நடித்துவிட்டு ஹீரோவாக நடிக்க ஒரு சில நடிகர்கள் திணறி வரும் நிலையில் அசால்ட்டாக தான் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கனவு என்றாலும் ஒரு ரொமான்ஸ் பாடலிலும் நடித்துவிட்டார். இது ஒரு ஒன் டைம் லக் என்று சொன்னவர்கள் எல்லாம் மண்டேலா படம் தேசிய விருது வாங்கியபோது இவர் ஹீரோதான் என்று ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று சமாதானத்திற்கு வந்தார்கள். எல்லா நேரமும் ஹீரோவாக நடிக்க முயற்சிக்காமல் நல்ல கதைகளுக்காக காத்திருந்து நகைச்சுவைக் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து வருகிறார் யோகிபாபு.
மக்களை சிரிக்க வைக்கும் கலைஞனிடம் கூட சாதி பாக்கனுமா
தீவிர முருக பக்தரான யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் இந்த முறை சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்ற யோகிபாபு அர்ச்சனை செய்துமுடித்தப் பின் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மிக சாதாரனமாக அர்ச்சகருக்கு கை கொடுத்தார் யோகி பாபு . ஆனால் அவருக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார் அர்ச்சகர்.
சாதிய பாகுபாட்டால் தான் கை கொடுக்க மறுத்துள்ளதாக இணையவாசிகள் கூறிவருகிறாரகள். இணையதளத்தில் பரவி வரும் இந்த காணொளி எல்லோரையும் கலாய்க்கும் யோகி பாபு அமைதியாய் இருப்பதைக் கண்டு பொங்கி எழுந்துள்ளார்கள். ஆனால் இந்த வீடியோ தொடர்பாகவோ, சம்பவம் தொடர்பாகவோ யோகிபாபு தரப்பு விளக்கம் கொடுத்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.