ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகைக்கும் அவரது கணவருக்கும் அவதூறு வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


‘உறவை காத்த கிளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜீவிதாவும், ‘இது தாண்டா போலீஸ்’ படம் மூலம் பிரபலமான நடிகர் ராஜசேகரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தெலுங்கி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்துள்ளனர். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கு தங்கையான ஜீவிதா நடித்துள்ளார். கிரிக்கெட்டை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினி நடித்துள்ளார். 


இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஜீவிதா - ராஜசேகர் தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு ஸ்டார் ஆன சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கியானது தனியாக கள்ளச்சந்தையில் ரத்தம் விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய வகையில் ஜீவிதா - ராஜசேகர் தம்பதி முன்னதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக சிரஞ்சீவியின் உறவினரும், நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையுமான அல்லு அரவிந்த் 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 




அவதூறு கருத்து கூறியதால் ஜீவிதா - ராஜசேகர் தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நம்பள்ளி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தெலுங்குத் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் ஜீவிதா - ராஜசேகர் தம்பதி இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளனர். அபராதத் தொகையை செலுத்திய நிலையில், இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜீவிதா தமிழில் ‘காதலே நிம்மதி’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ஆளப்பிறந்தவன், ராஜமரியாதை, தர்மபத்தினி, தப்பு கணக்கு, பாசம் ஒரு வேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தெலுங்கில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த ’மகாடு’ படத்தில் கடைசியாக ஜீவிதா நடித்திருந்தார். படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய ஜீவிதா, 2022ஆம் ஆண்டு வெளிவந்த சேகர் படத்தை இயக்கி இருந்தார். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் ஜீவிதா. இந்தச் சூழலில் அவருக்கு பின்னடைவு தரும் விதமாக அவதூறு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.