தமிழகமெங்கும் பெண் ரசிகைகளின் கூட்டத்தை அதிகம் சம்பாதித்த ஒரு நடிகை என்றால் அது சந்தேகம் இன்றி நதியா தான். எங்கு பார்த்தாலும் நதியா வளையல், நதியா பொட்டு, நதியா கிளிப், நதியா கொண்டை என நதியா மயமாக ரசிகைகள் எங்கு பார்த்தாலும் நதியாவையே பிரதிபலித்தனர். 80ஸ் கிட்ஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் ஐகான் மாடலாக திகழ்ந்தார் நதியா. பெரும்பாலும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவரும் சினிமாவில் குடும்ப பாங்கான ஒரு நடிகையாக வலம் வந்த நதியாவை தமிழ் சினிமா இன்று வரை கொண்டாடுகிறது.

  


 



மலையாளத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'நோக்கத்தாதுாரத்து கண்ணும் நட்டு' என்ற படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குநர்  பாசில் அதை அப்படியே தமிழில் ரீ மேக் செய்த படம் தான் 'பூவே பூச்சூடவா'. கவர்ச்சி, ஆக்ஷன், ஆபாசம் இப்படி கமர்ஷியல் படத்திற்கு தேவையான எந்த ஒரு மசாலாவும் இல்லாமல் தெள்ள தெளிந்த ஒரு நீர் போல கலப்படம் இல்லாத ஒரு படத்தை கொடுத்தார். அந்த சுத்தமான திரைப்படம் வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நதியாவின் அறிமுகம். பாட்டி - பேத்தி இடையே நடக்கும் பாசப்போராட்டம் கொண்ட உணர்ச்சிபூர்வமான திரைக்கதை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.  பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்தின் திரைக்கதையை  அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. பாட்டியாக பத்மினியும் பேத்தியாக நதியாவும் நடிக்கவில்லை ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து இருந்தார்கள்.


பேத்தியை முதலில் எதிர்ப்பதிலும் சரி, ராசியான பிறகு பாசத்தை பொழிவதிலும் சரி, பத்மினியின் நவரச நடிப்பு அபாரம். கிளைமாக்ஸ் காட்சியில் பேத்தியை வழியனுப்பி வைக்கும் காட்சி பார்வையாளர்களின் கண்களையும் குளமாக்கியது. ஜெய்சங்கர், எஸ்.வி. சேகர் என அனைவரும் அவர்களின் பங்களிப்பை சிறப்பாக செய்து இருந்தனர்.  


 



நதியாவுக்கு மட்டுமல்ல மற்றுமொரு செலிபிரிட்டிக்கும் பூவே பூச்சூடவா திரைப்படம் ஒரு ஸ்பெஷல் திரைப்படமாக அமைந்தது. கே.எஸ். சித்ராவின் குரலில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் வெளியான பாடல் 'சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா...'. அன்றில் இருந்து சின்ன குயில் சித்ரா என்பது அவரின் அடையாளமாக மாறியது.  இன்றும் தீபாவளி ஸ்பெஷல் பாடல்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் இளையராஜாவின் 'பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...' பாடல்.  பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா... என நெஞ்சை வருடும் மெல்லிசை பாடல் எத்தனை சோகங்கள் இருந்தாலும் அதை அப்படியே இளக செய்துவிடும் இனிமையான ராகம். 


38 ஆண்டுகளை கடந்த பின்பும் சிறிதும் வாடாத மாலை தான் 'பூவே பூச்சூடவா'.