இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுகதான். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி. தேசிய அளவில் பாஜகவுடன்தான் கூட்டணி. மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெண்களுக்கு ரூ.1000 தரப்படுகிறது.


மகளிர் உரிமைத்திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தராதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்ததாவது, “பிரதமர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அமைச்சர் பொன்முடி மீது 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கின்பேரில் அமலாக்கத்துறை காலதாமதமாக சோதனைக்கு வந்துள்ளனர்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.அக்கூட்டத்தில் எல்லாருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிமுகவில் 1 கோடியே 70 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். எங்களது இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதுதான்”என்றார். 


மகளிர் உரிமைத்தொகை திட்டம்:


தொடர்ந்து பேசிய அவர், “மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2 ஆண்டுளாக புறக்கணிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் மையமாக வைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அறிவித்து 4 மாதங்களாகியும் கணக்கெடுப்பு முடியவில்லை.


இத்திட்டத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர், அரசின் அறிவிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியது.


தவறு செய்தவர்களை அணுகி அமலாக்கத்துறை ஆதாரம் அடிப்படையில் விசாரணை செய்கிறது.பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, கட்சியினரை ஊக்கப்படுத்த எல்லா கட்சி தலைவரும் சொல்வதுதான். 


தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். 2019, 2021 தேர்தல்களை போல கூட்டணி தலைமையாக அதிமுக தொடரும், யாருக்கு எவ்வளவு சீட் என்பதை இப்போது சொல்ல முடியாது. கூட்டணி கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட்டு தெரிவிக்கப்படும்


குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. குடிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. அதனால் மதுபானம் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது. ஊழலுக்க கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலினை வெயிட்டாக கவனித்துள்ளார். 


ஆட்சி கவிழ்ந்து போடுமோ என பயந்து மிரண்டு போய்  செந்தில் பாலாஜியை சந்தித்தனர். ஆறுதல் சொல்ல‌ செல்லவில்லை, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஜவுளி தொழில் நலிவடையும் சூழல் உள்ளது.ஸ்பின்னிங் மில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணவில்லை” என தெரிவித்தார்.