நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள கண்ணப்பா படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக இருக்கும் என அவரின் தந்தையும், நடிகருமான மோகன் பாபு கூறியுள்ளார். 


தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயத்தில் உருவாகியுள்ள படம் “கண்ணப்பா”. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், பிரம்மானந்தம், மோகன் பாபு, ஐஸ்வர்யா, முகேஷ் ரிஷி, சுரேகா வாணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மோகன்லால், அக்‌ஷய்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமா பிரபலங்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். கண்ணப்பா படத்தை 24 பிரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து நடிகர் மோகன் பாபு தன்னுடைய ஏவிஏ என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளார். 


பருச்சுரி கோபால கிருஷ்ணா , ஈஷ்வர் ரெட்டி, ஜி. நாகேஸ்வர ரெட்டி மற்றும் தோட்ட பிரசாத் ஆகியோர் இணைந்து கண்ணப்பா படத்தின் கதையை எழுதியுள்ளனர். சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்பனின் கதையுடன் புனைவு கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சக திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர். 






இந்நிகழ்ச்சியில் நடிகர் மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?. ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.சிவ பெருமானினின் கட்டளையின் பேரில், கண்ணப்பாவிற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும் பிரபாஸுக்காக எழுதப்பட்ட கதையாகவும் இதை கிருஷ்ணம் ராஜு கொடுத்திருக்கிறார். இந்த மாபெரும் காவிய படைப்பின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘கண்ணப்பா’-வின் காவியத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


தொடர்ந்து நடிகை ப்ரீத்தி முகுந்தன், “’கண்ணப்பா’ படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் பாபு, விஷ்ணு, முகேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்தார்.