தெலுங்கு நடிகர் மெகாஸ்டார் சிரஞ்சீவி திரைத்துறை தொழிலாளர்களுக்கென அனைத்து வசதிகளும் கொண்ட இலவச மருத்துவமனையை கட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி திரைத்துறையில் மட்டுமல்ல, பிறருக்கு உதவுவதிலும் மெகாஸ்டார் தான். ரத்த தானம் செய்வது தொடங்கி, தேவைப் படுவோருக்கு உதவி செய்வது வரை சேவை மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார். கொரோனா முதல் அலையின் போது திரைத்துறையினருக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். இரண்டாவது அலையின் போது தன் சொந்த செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைத்துக் கொடுத்து உதவினார்.


இந்த நிலையில், திரைத்துறையினருக்கென்று பிரத்யேகமான இலவச மருத்துவமனையை நடிகர் சிரஞ்சிவி கட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தெலங்கானா மீன்வளத்துறை அமைச்சர் தலசனி ஸ்ரீனிவாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த  மருத்துவமனையை சினிமா செய்தியாளர்கள் அவர்களது குடும்பத்தினர் உள்பட அனைத்து தரப்பு திரைத்துறையினரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு சிகிச்சையை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் தினமும் வந்து செல்வார்கள். அவர்களிடம் இலவசமாக ஆலோசனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைகள் ஏற்கனவேத் தொடங்கிவிட்டதாகவும், திரைத்துறையினருக்கு ஏதுவாக ஃபிலிம் நகர் அல்லது ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மருத்துவமனை கட்டுவதற்கான சரியான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.